World Family Doctor Day 
ஸ்பெஷல்

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

கிரி கணபதி

ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புமிக்க நாள், மருத்துவ சேவையை நாடும் தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மருத்துவர்களை கௌரவிப்பதற்கான நாளாகும். ஒரு குடும்பத்தில் புதிதாக பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் விரிவான மருத்துவ கவனிப்பை வழங்கி, இச்சமூகத்தில் குடும்ப மருத்துவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களது அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. 

General Practitioners அல்லது Primary Care Physicians என அழைக்கப்படும் குடும்ப மருத்துவர்கள், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களது பரந்த அளவிலான அறிவுத்திறன், பல்வேறு நோய்கள் மற்றும் சுகாதார நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவுகிறது. சிறிய வியாதிகள் முதல் நாள்பட்ட நோய்கள் வரை அனைத்தையும் கையாளும் இவர்கள், தேவைப்படும்போது நோயாளிகளை மதிப்பீடு செய்து சிகிச்சைக்காக நிபுணர்களிடம் அனுப்புகின்றனர்.  

குடும்ப மருத்துவராக இருக்கும் பல மருத்துவர்கள் தங்கள் வேலையில் அபரிமிதமான திருப்தியைக் காண்கின்றனர். தங்களுக்கு பிறரது நோயை குணப்படுத்தவும், ஆறுதல் கூறவும், உயிரைக் காப்பாற்றும் ஆற்றல் இருப்பதையும் நினைத்து பெருமிதம் அடைகின்றனர். பல தொழிலதிபர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த மருத்துவர்களைவிட  அதிகமாக சம்பாதிக்கலாம், ஆனால் பல குடும்ப மருத்துவர்கள் தான் ஒரு மருத்துவராக இருப்பதை நினைத்தே பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில், இவர்களால் மோசமாக இருக்கும் ஒருவரை சிறப்பாக மாற்ற முடியும். சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவரை காப்பாற்ற முடியும். பல விரக்தியில் இருக்கும் குடும்பங்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக குடும்ப மருத்துவர்கள் திகழ்கின்றனர். 

Family Doctor

ஒரு குடும்ப மருத்துவரின் பங்கு சராசரி மருத்துவர்களுக்கும் அப்பாற்பட்டது. அவர்கள் குடும்ப நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும், நோயாளிகளின் ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றனர். உடல் பராமரிப்பு மட்டுமல்லாது, குடும்பத்திற்குத் தேவைப்படும் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் வழங்குகிறார்கள். பிறப்பைக் கொண்டாடவும், இளமைப் பருவத்தில் வழிகாட்டுதலை வழங்கவும், இழப்பு காலங்களில் ஆறுதல் அளிக்கவும், ஒரு குடும்பத்திற்கான எல்லா நிலைகளிலும் குடும்ப மருத்துவர் இருக்கிறார். 

மக்கள் தற்செயலாக ஒரு உயிரை காப்பாற்றிவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து பெருமைப்படுவார்கள். ஆனால், குடும்ப மருத்துவர்கள் பிறரது உயிரைக் காப்பாற்றுவதையே வாழ்வாதாரமாகச் செய்கின்றனர். இதைவிட சிறந்த வாழ்க்கைமுறை வேறு எதுவும் இருக்கிறதா என்ன? அவர்களது தொழில் அவர்களுக்கு போதுமானவற்றை செய்து கொடுக்கிறது. 

குழந்தைகள், வீடு, குடும்பம் என அனைத்தையும் நிர்வகிக்க அவர்களிடம் போதுமான பணத்தைக் கொடுக்கிறது. தங்களால் முடிந்த அளவுக்கு இச்சமுகத்தை அவர்கள் சிறப்பாக பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய நவீன உலகில், குடும்ப மருத்துவர் நடைமுறை கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலும் அனைவரும் Specialist-களையே எதிர்பார்க்கின்றனர். இந்த மனநிலை, குடும்ப மருத்துவர்களின் தேவையை இல்லாமல் செய்துவிட்டது.  

இன்று, உலக குடும்ப மருத்துவர் தினத்தில், இச்சமூகத்திற்கு அளப்பரிய பங்காற்றிய குடும்ப மருத்துவர்களை கொண்டாட வேண்டியது அவசியம். எனவே, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய குடும்ப மருத்துவருக்கு நன்றி கூற கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்!  

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT