இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வலம்வரும் ரவீந்திர சிங் ஜடேஜா. 200 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக விரைவாக எட்டிய இடதுகை பந்துவீச்சாளர், 1993ல் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ரன்களை குவித்தவர்கள் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ரவீந்திர சிங் ஜடேஜா.
ஆனால், இவருக்கு சிறுவயதில் ஒரு வித்தியாசமான நோய் இருந்தது பலருக்கு தெரியாது. வாங்க ரவீந்திர சிங் ஜடேஜா பற்றி தெரிந்துக்கொள்வோம். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திரசிங் ஜடேஜா 1988 ம் ஆண்டு குஜராத்தில் நவகம் என்ற இடத்தில் பிறந்தார். ரஜ்புத் வம்சத்தில் பிறந்த இவரின் தந்தை குடும்ப வறுமை காரணமாக ATMல் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஜடேஜா பிறந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் தவித்துக்கொண்டிருந்தது . ராஜ்புத் வம்சத்தில் பெண்கள் வேலைக்கே செல்ல கூடாது. ஆனால் வேறு வழியில்லாமல் ஜடேஜாவின் அப்பா தனது மனைவியை ஒரு செவிலியர் வேலைக்கு அனுப்பிவைத்தார்.
ரவீந்திர ஜடேஜாவிற்கு சிறு வயதில் தூக்கத்தில் நடக்கும் குறைபாடு இருந்தது. மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டதற்கு ”ஜடேஜாவை எதாவது ஒரு விளையாட்டில் சேர்த்து விடுங்கள். பகல் முழுவதும் விளையாடி இரவு களைப்பில் தூங்கி விடுவார் ”என்று கூறினார். அப்படித்தான் அவரின் தந்தை ஜடேஜாவை 10 வயதில் கிரிக்கெட் விளையாட அனுப்பிவைத்தார். நினைத்தது போல் அவர் அன்றிரவு நன்றாக தூங்கிவிட்டார். ஆனால் அவர் சோர்வானது விளையாடி அல்ல சதம் அடித்து மைதானத்தில் எங்கோ விழும் பந்தை தேடி கண்டுப்பிடித்துதான்.
ஜடேஜாவிற்கு பந்துகளை பொறுக்கியே வெறுத்துவிட்டது. தான் இனி விளையாடப்போவதில்லை என்று வீட்டிற்கு வந்து கூறினார். இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தூக்கத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இது சரிவராது என்று அவரின் தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சியாளரிடம் அனுப்பி வைத்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற போலிஸ்காரர். கிரிக்கெட் பார்த்தே பயிற்சியாளர் ஆனவர். தவறு செய்தால் இருகண்ணத்திலும் அறை மட்டும் தான் விழும். ஏற்கனவே பயிற்சி எடுத்து கிரிக்கெட் கிளப்பில் பந்து எடுத்து தர மட்டுமே வைத்ததால் தான் அங்கிருந்து வேறு ஒரு கிளப்பிற்கு மாறினார் ஜடேஜா. ஆனால் இங்கும் ஃபீல்டிங் செய்ய சொல்லியே உயிரை வாங்குகிறார் என்று நொந்துப்போனார்.
போகப்போகத் தான் தெரிந்தது அவர் பயிற்சியாளரின் பயிற்சி முறையே வேறு என்று. இன்று வரை ஜடேஜா ஒரு பெஸ்ட் ஃபீல்டர் என்று மக்களால் கொண்டாடப்படும் அளவிற்கு இருக்கிறார் என்றால் அதற்கு அன்று போலீஸ்கார பயிற்சியாளர் கொடுத்த பயிற்சித்தான் காரணம்.
ஒரு நாள் ஜடேஜாவின் தாய் வேலைக்கு சென்று வரும்பொழுது அழுதுக்கொண்டே வந்தார். வரும்வழியில் சிலர் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்தாக கூறினார். அதற்கு அவரின் தாய் ”இதற்காகவே நீ ஒரு பெரிய கிரிக்கெட்டராக ஆகி கார் வாங்கி அதில் என்னை அழைத்துப்போக வேண்டும் ” என்று ஜடேஜாவிடம் கூறினார். ஆனால் அப்படி சொல்லிய ஆறு மாதங்களிலேயே அவரின் தாய் காலமானார். ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் வீட்டினுள்ளே முடங்கினார் ஜடேஜா. பிறகு அவர் அம்மாவின் கனவிற்காக போராடத் தொடங்கினார்.
2006 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவருக்கான கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் 2008ம் ஆண்டு IPL தொடரில் ராஜஸ்தான் அணியில் அறிமுகமானார்.சிறு வயதிலையே பெரிய இடம் என்பதால் அவருக்கு பயம் வந்தது. தனது பயிற்சியாளரிடம் அதை சொன்னதற்கு ”10 வயது இருக்கும்போதே 18 வயதுடையவர்களுடன் விளையாடினாய் , சென்று கெத்தாக விளையாடு” என்று கூறினார். ஜடேஜா அதே கெத்துடன் ட்ரெஸிங் ரூமில் அமர்ந்திருந்தார். ஷேன் வார்னே வந்தவுடன் அனைவரும் எழுந்தனர். அவர் மட்டும் எழவே இல்லை. வார்னே அழைத்து கேட்டதற்கு என் பயிற்சியாளர் கெத்தாக இருக்க கூறினார்” என்ற அவரின் எதார்த்த பேச்சு அனைவரையும் ஈர்த்தது. பிறகு 2009 ம் ஆண்டு தேசிய அணியில் இடம்பெற்றார்.
2012 ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டி முடிந்த கையோடு தன் அம்மா சொன்னதுபோல் ஒரு கார் வாங்கி தனது தாய் வேலைப் பார்த்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று நிறுத்திவிட்டு காரின் உள்ளே தாயின் புகைப்படத்தை வைத்து ” விளையாட சென்று விட்டு வருகிறேன் அம்மா” என்று கூறிவிட்டு சென்ற அந்த நொடித்தான் முழு வெற்றி அடைந்ததுபோல் பெருமிதம் கொண்டார் ரவீந்திர ஜடேஜா.