நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான டி20 போட்டியில் இந்திய பவுலர்கள் அனைவரும் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்யமுடியாமல் நமது இந்திய அணி பலமுறை தடுமாறியிருக்கிறது. இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் கூட பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்யாததால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. ஹார்திக் பாண்டியா மட்டுமே இரண்டிலும் கலக்கினார். ஆனால், இவருக்கு காயம் ஏற்பட்ட பின் இவரின் இடத்தை நிரப்ப யாருமே இல்லை.
ஆகையால், முன்னாள் வீரர்கள் பலர் ஏன் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்தால் என்ன என்ற கேள்விகளை எழுப்பினர். ஏனெனில், இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், சவுரவ் கங்குலி ஆகியோர் பவுலிங்கிலும் திறன் பெற்றவர்களாக இருந்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். டி20 தொடர்களில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு பவுலிங் வாய்ப்புகள் வழங்கப்பட தொடங்கின. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து தற்போது மொத்தம் 9 வீரர்கள் இந்திய அணியில் பவுலிங் செய்கின்றனர்.
நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், அபிஷேக் சர்மா உள்ளிட்ட 7 வீரர்கள் பவுலிங் செய்தனர்.
பவுலிங் செய்த ஏழு பேருமே விக்கெட் வீழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். ஏனெனில், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுபோல பவுலிங் செய்த அனைத்து வீரர்களும் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். இதனால், ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியாவிற்கு பவுலிங் வாய்ப்பு வழங்க அவசியம் ஏற்படவில்லை.
இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில விஷயங்களில் முடிவோடு இருந்தார். அதாவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில், ஆல்ரவுண்டர்களை களமிறக்குவதில் (முழு நேர பவுலர்களுக்கு வாய்ப்பு அளிப்பதைவிட) கவனமாக இருந்தார். இதனால், இந்திய அணி ஒரு புது ரூட்டை கையில் எடுத்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அப்றம் என்னப்பா? பவுலர்கள் பேட்டை கையில் எடுக்கலாமே!!