தமிழ்நாட்டிலிருந்து முதன்முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார் என்றால் அது அஸ்வின்தான். இதனையடுத்து ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. அடுத்த மூன்றுப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. அந்தவகையில் அதன் ஐந்தாவது போட்டி இன்று தரம்சாலாவில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 27 வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் அஸ்வின் மட்டுமே முதல் முறையாக 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதேபோல் இந்திய அளவில் இதுவரை 13 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அஸ்வின் தற்போது 14வது இந்திய வீரர் ஆவார்.
2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமான அஸ்வின் இன்று வரை அவரின் திறமையால் மட்டுமே இந்திய அணியில் நிலைத்து வருகிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டராகச் செயல்பட்டு வரும் அஸ்வின் இதுவரை 507 விக்கெட்டுகளையும் 3,309 ரன்களையும் எடுத்துள்ளார்.
100வது போட்டியில் விளையாடப்போகும் அஸ்வினுக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் மரியாதை வழங்கியது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் அஸ்வினுக்கு ஸ்பெஷல் கேப் (Cap) வழங்கி மரியாதை அளித்தார். அந்தத் தருணத்தில் அஸ்வின் மனைவி ப்ரீத்தி மற்றும் இரு குழந்தைகளும் அவருடன் இருந்தனர். அந்தக் கேப்பில் 100 என்ற எண் இருந்தது. அந்த கேப்புடனும் குடும்பத்துடனும் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதேபோல் இந்திய அணி வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அஸ்வினுக்கு அளித்தனர்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த அஸ்வின் ரோகித் ஷர்மாவைக் கட்டி அணைத்துக்கொண்டார். தமிழக வீரர் ஒருவருக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கியது இதுவே முதல்முறை. இதனால் ஒட்டுமொத்த தமிழகமுமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.