சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத்திற்குமான போட்டியில் முதலிலிருந்தே குஜராத் அணியை சிஎஸ்கே அணி கதிகலங்க வைத்தது. அதில் மூன்று வீரர்கள் சிஎஸ்கே அணி வெற்றிபெற மிகவும் முக்கிய காரணமானார்கள்.
நேற்று டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியிலிருந்து ஓப்பனராகக் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவிந்திரா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரச்சின் வெறும் 20 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் நின்று அடித்த ருது 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். இதனால் சிஎஸ்கே அணி 10 ஓவர்களிலேயே ஏறத்தாழ 100 ரன்கள் எடுத்தது. ஆகையால் 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்துவிடலாம் என்று ஸ்கோர் கணிக்கப்பட்டது.
இதனையடுத்து அடுத்து களமிறங்கிய அனைவருமே சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினார்கள். முதலில் ரச்சின், இரண்டாவது ருதுரஜ் ஆகியோர் ஓப்பனிங் ஆட்டத்திலேயே அணியைத் தூக்கிவிட்டனர். அதன்பின்னர் சிவம் டூபே 23 பந்துகளிலேயே 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர்கள் மூவரும் குறைவான ஓவர்களிலேயே இவ்வளவு ரன்கள் எடுத்ததால்தான் அணி அதிக ஸ்கோர் எடுக்க காரணமானது.
இவர்கள் மூவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுச் சென்றனர். சிஎஸ்கே அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் நிறையவே உள்ளனர். ஆனால் பவுலிங்கில் பார்க்கும்போது சிலரே இருந்ததால் ஆட்டத்தைக் கணிக்க முடியாது என்பதுபோல தான் இருந்தது.
அதேபோல் குஜராத் அணியில் ரஷித் கான் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். சாய் கிஷோருக்கு இது முதல் போட்டி எனினும் 3 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்துச் சிறப்பாக விளையாடினார்.
அதன்பின்னர் பேட்டிங்கில் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணி வீரர்கள் ஒருவருமே 40 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இணையான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடவில்லை. இதுவே ஒரு பெரிய சரிவாக அமைந்தது. பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி பவுலிங்கிலும் அதே ஃபார்மில்தான் ஆடியது.
தீபக் சஹர், ரஹ்மான் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் 4 ஓவர்களில் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்க வழி வகுத்தனர். ஆனால் இருபது ஓவர் வரை விளையாடிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களுடன் வெளியேறியது. இதனால் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.