Dean Elgar Retire.
Dean Elgar Retire.  
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின் ஓய்வுபெறுகிறார் டீன் எல்கர்!

ஜெ.ராகவன்

தென்னாப்பிரிக் அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26 தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் எல்கர் முதன் முதலாக இடம்பெற்றார். இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இடதுகை ஆட்டக்காரரான் எல்கர், 13 சதங்கள், 23 அரைசதம் உள்பட 5,146 ரன்களை குவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக எல்கர் தெரிவித்துள்ளார். முதல் போட்டி டிச. 26 முதல் டிச. 30 வரை செஞ்சூரியனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7 வரை கேப்டவுனிலும் நடைபெறுகிறது என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா ஓர் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

36 வயதான எல்கர் 8 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும்  விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2018 இல் வெள்ளைப்பந்தில் கிரிக்கெட் ஆடினார்.

சர்வதேச அளவில் 12 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது எனது கனவுகளுக்கு அப்பாற்பட்டது. மறக்கமுடியாத பயணங்களில் நானும் இருந்தேன் என்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும் என்று எல்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்று சொல்வார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் பங்கேற்பதுடன் எனது கிரிக்கெட் பயணம் முடிகிறது. ஒரு அழகான, அருமையான விளையாட்டிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்துவிட்டேன் என்றார் எல்கர்.

கிரிக்கெட்தான் எனக்கு எல்லாம் கொடுத்தது. கேப்டவுன் டெஸ்ட் போட்டிதான் எனது கடைசி போட்டி. கேப்டவுனில் உள்ள ஸ்டேடியம்தான் எனக்கு பிடித்தமான விளையாட்டு அரங்கம். நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதன் முதலில் நான் ரன் எடுத்த ஆடுகளம். அதுவே இப்போது கடைசியும்கூட என்று எல்கர் மேலும் கூறினார்.

எல்கர், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்துள்ளார். மொத்தம் 19 போட்டிகளில் அவர் 9 போட்டியில் வெற்றிபெற்றார்.   ஏழு போட்டிகள் தோல்வியில் முடிந்தன. 4 போட்டிகள் டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இயக்குநர் எனோச் நக்வி கூறுகையில், “எல்கர் பழையமுறை ஆட்டத்தில் வந்தவர். அவரால் எதையும் உள்வாங்கவும், போராடவும் முடியும். அவர் ஓய்வுபெறுவது எங்களுக்கு இழப்புதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT