Test Cricket  
விளையாட்டு

சொந்த மண்ணில் இந்தியா இழந்த டெஸ்ட் தொடர்கள் எத்தனை தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்தியா பல வெற்றிகளைப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை டெஸ்ட் தொடரை இழந்துள்ளது என உங்களுக்குத் தெரியுமா? வாங்க இப்போதே தெரிந்து கொள்வோம்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரரின் முழு செயல்திறனையும் சோதிக்கும் போட்டி என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான். இதில் தான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பொறுமையும், நிலைத்தன்மையும் தெரிய வரும். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் மைதானங்கள் சொந்த மண்ணில் விளையாடும் அணிகளுக்குத் தான் சாதகமாக இருக்கும். அதற்கேற்ப டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றுவரை சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தான் அதிகளவிலான வெற்றிகளைப் பெற்றுள்ளன. வெளிநாட்டில் ஒரு அணி ஒரேயொரு வெற்றியைப் பெற்றாலும், அது மிகப்பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. ஆனால், அதுவே ஒரு தொடரையே வென்றால் அது வரலாறு போற்றும் சரித்திர சாதனையாக மாறுகிறது.

இந்திய அணியும் சொந்த மண்ணில் பல டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த நாடுகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியாவை அவர்களின் நாட்டிலேயே தொடர்ந்து இருமுறை வீழ்த்துவது என்பது சாதாரண ஒன்றல்ல.

அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்லும் அதே வேளையில், சிலசமயம் சொந்த மண்ணிலும் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்தியா. இதற்கு முதலில் தொடக்கப் புள்ளியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி தான்.

இந்தியா கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு தற்போது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்தே நியூசிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே. அதுமட்டுமின்றி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நியூசிலாந்து அணி.

இதுவரையில் இந்திய அணி மொத்தமாக 17 முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தலா 5 முறை டெஸ்ட் தொடரை நழுவ விட்டது இந்தியா. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1983/84 இல் டெஸ்ட் தொடரை வென்றது. அதேபோல் இங்கிலாந்து அணி கடைசியாக 2012/13 இல் டெஸ்ட் தொடரை வென்றது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த அணி கடைசியாக 2004/05 இல் டெஸ்ட் தொடரை வென்றது. இது தவிர்த்து பாகிஸ்தான் அணி 1986 ஆம் ஆண்டில் ஒருமுறையும், தென்னாப்பிரிக்க அணி 1999 ஆம் ஆண்டில் ஒருமுறையும், நியூசிலாந்து அணி 2024 ஆம் ஆண்டில் ஒருமுறையும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று, சாதனை படைத்திருந்தது இந்தியா. வேறு எந்த அணியும் இத்தனை ஆண்டுகள் இப்படியொரு சாதனையை கைவசம் வைத்திருக்கவில்லை. இருப்பினும் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்திருப்பது சக கிரிக்கெட் ரசிகராக எனக்கும் வருத்தத்தை அளிக்கிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT