Saurabh Netravalkar  
விளையாட்டு

அமெரிக்க அணியில் கலக்கும் சவுரப் நெட்ரவல்கர் யார் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் சவுரப் நெட்ரவல்கர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு பொறியியலாளர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா! யார் இந்த சவரப் நெட்ரவல்கர் என விவரிக்கிறது இந்தப் பதிவு.

எட்டாவது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் சிறிய அணிகள், நல்ல ஃபார்மில் இருக்கும் பெரிய அணிகளை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. அவ்வகையில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது அமெரிக்க அணியும் இணைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர்கள் அந்த அணியில் இருக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள் தான்.

அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் படேல் மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் சவுரப் நெட்ரவல்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி வீரர்களும் அமெரிக்க அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக உள்ளனர். இதில் சவுரப் நெட்ரவல்கர் கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இதுமட்டுமின்றி அந்தத் தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதையும் நிரூபித்து உள்ளார். இப்படி இருக்கையில் இவர் எப்படி அமெரிக்க அணியில் இடம் பிடித்தார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் பிறந்து வளர்ந்த சவரம் நெட்ரவல்கர் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். 2010 U19 உலகக் கோப்பைக்கு பிறகு, போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். இதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தான் இவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது பொறியியல் வேலையையும் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் நெட்ரவல்கர், வார இறுதி நாள்களில் கிரிக்கெட் விளையாட கிட்டத்தட்ட 6 மணி நேரம் பயணம் செய்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்து செல்வார். இவரின் திறமையைக் கவனித்த அமெரிக்க அணி நிர்வாகம் 2018 ஆம் ஆண்டு தனது அணியில் சேர்த்துக் கொண்டது. பிறகு இவரது சிறந்த பந்துவீச்சால் வெகு விரைவிலேயே அமெரிக்க அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

வார நாள்களில் வேலை மற்றும் வார இறுதி நாள்களில் கிரிக்கெட் என தனது வாழ்க்கையில் இவை இரண்டிலும் எந்தக் குறையும் வராத அளவிற்கு பார்த்துக் கொண்டார் நெட்ரவல்கர். இவரின் சிறப்பான பந்துவீச்சு தான் தற்போது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்போட்டியில் நெட்ரவல்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, சூப்பர் ஓவரிலும் நன்றாக பந்துவீசி அமெரிக்க அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தியரான சவுரப் நெட்ரவல்கர் அமெரிக்க அணியில் சிறப்பாக செயல்படுவது அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT