ஒரு தாய் இளமையான தோற்றத்துடன் இருக்க விரும்புவது தவறல்ல. மூப்பு என்பது யாக்கைக்கு விதிக்கப்பட்ட பருவங்களில் ஒன்று. தவிர்க்க முடியாத ஒன்று. மரங்களும், செடி கொடிகளும், ஜீவ ஜந்துக்களும் ஜீவனற்ற அஃக்றிணைப் பொருள்களும் முதிர்ச்சி அடைவதையோ பழசாக ஆவதையோ யாராலும் தடுக்க முடியாது. எனவே வயதை வெளியே சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
வயதாவது என்பது ஒரு இயல்பான விஷயம். அதை ஏற்றுக்கொண்டு வயசுக்கேற்ற நளினத்துடன், இருக்கலாம். அதே நேரத்தில் மனசளவில் இளமையுடன், சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்க முடியும்.
அளவான சாப்பாடு, தினம் தவறாமல் உடற்பயிற்சி, நல்ல தூக்கம், தியானம், இவை மனதையும், உடலையும், இளமையோடு வைத்திருக்க உதவுகின்றன. ‘இளமையோடு’ என்கிற வார்த்தையைத் தவறாகப் புரிந்த கொள்ளக் கூடாது. ஒருவருக்கு அறுபது வயதாக இருக்கலாம். ஆனால் அந்த வயதுக்குரிய தள்ளாமை, சோர்வு, வியாதிகள், மூட்டுப் பிடிப்பு, இவை ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்துகொண்டு, தங்கள் வேலைகளை தாங்களே செய்துகொண்டு, உற்சாகமாய் எல்லா விஷயங்களிலும் சுவாரஸ்யம் குறையாமல், அனைவருடனும் பாசத்துடனும் பழகிக்கொண்டு இருக்கலாம். இந்த நிலை எழுபது வயதைக் கடந்தவர் களுக்கும் பொருந்தும்.
“இந்த வயசிலும் இந்தம்மா என்ன சுறுசுறுப்புடன் இருக்கிறாள்” என்று மற்றவர்களை அது பேசவைக்கும்.
உணவு விஷயத்தில் கவனத்துடன் இருத்தல் நல்ல. வறுத்த, பொரித்த உணவு வகைகளை கூடுமான வரை தவிர்த்து, உடல் எடை கூடுவதை நிறுத்தலாம். அதிக அளவில் காப்பி, தேனீர் அருந்துவது இனிப்பு வகைகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களை பெண்கள் நாற்பது வயதைக் கடக்கும்போதே தவிர்க்கலாம். கேரட், முள்ளங்கி, தக்காளி, பூண்டு, நிறைய கீரை வைககள், பழங்கள் இவற்றை தினசரி மெனுவில் இடம் பெறச் செய்யலாம்.
அடுத்து உடற்பயிற்சிக்கு யோகாப்பியாசம் செய்யலாம். திடீரென்று வயதான பிறகு, ‘யோகா’வை தானே துவங்கிச் செய்யக் கூடாது. அதனால் பல பிரச்னைகள் விளையலாம். தகுந்த பயிற்சியாளரிடம் கற்று பிறகு செய்யலாம். காலையில் காலார நடக்கப் போகலாம். இரவு முழுதும் குளிர்ந்து கலப்படத்தை துறந்து நிர்மலமாகும் விடியற்காலை காற்று நம் சருமத்துக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
தியானம் என்பது தினசரி நடத்தும் பூஜை ரூபத்திலும் இருக்கலாம். அன்றாட கவலைகளிலிருந்து மனசை அரை மணி நேரமாவது அகற்றி ஒருமைப்படுத்துவதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப் படுவதையும், கோபம் அடைந்த டென்ஷன் ஆவதையும் நிறுத்த வேண்டும். மனதைக் கண்டபடி அலையவிட்டால் தானே கவலை வரும். அதற்குப் பதில் நல்ல புத்தகங்களைப் படித்து, இன்னிசையைக் கேட்டு, தோட்டக் கலையில் ஈடுபாடு காட்டி, பொழுதை இனிதாகக் கழிக்கலாம்.
“உங்கள் வயசென்ன?” என்று உங்களை யாரும் கேட்டால் பதில் சொல்லத் தயங்கவே வேண்டாம். அப்படி அவர்கள் கேட்டால் உங்கள் உண்மை வயசை அவர்களால் ஊகிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.