இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்தியா. இது ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் செய்த விமர்சனம் என்ன என்பதை இப்போது காண்போம்.
டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியைச் சந்தித்து அரையிறுதி வாய்ப்பின்றி வெளியேறியது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்திய மகளிர் அணி, கடைசி கட்டத்தில் பதற்றமாக விளையாடி வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும்.
கடந்த டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியில் எந்தவொரு முன்னேற்றமும் தென்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “டி20 உலகக்கோப்பை நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் மைதானங்கள் மிகவும் மெதுவான தன்மை கொண்டவை. அதற்கேற்ப இந்திய வீராங்கனைகள் யாரும் சரியாக செயல்படவில்லை. யார் எந்த இடத்தில் விளையாட வேண்டும்; யாருக்கு எந்த ரோல் என்பது கூட இன்னமும் சரியாக திட்டமிடப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் நாம் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இறுதி வரைச் சென்று தோற்று விட்டோம். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் எவ்வித முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை. ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் சிறந்த அணிகளை வீழ்த்த வேண்டும். மற்ற அணிகள் நம்மை விட பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். லோயர் மிடில் ஆர்டரில் நாம் பல மாற்றங்களை செய்து பார்க்கத் தவறி விட்டோம். இந்திய ஆடவர் அணியில் இந்த மாற்றம் பெரிய அளவில் கைக்கொடுத்து இருப்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.
ஒருவேளை கேப்டனை மாற்ற வேண்டும் என நிர்வாகம் நினைத்தால், அதற்கேற்ப பல இளம் வீரர்கள் நமது அணியில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா பல ஆண்டுகளாக துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதோடு நல்ல பேட்டிங் திறன் கொண்ட ஜெமிமாவும் கேப்டன் பதவிக்கு ஏற்றவர் தான். இனியாவது இந்திய மகளிர் அணி மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்” என மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தவறுகளை சரிசெய்து அடுத்த ஐசிசி தொடரிலாவது இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விரும்புகின்றனர். ஆடவர் அணி நீண்ட காலத்திற்கு பிறகு நடப்பாண்டில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதேபோல் இனிவரும் ஆண்டுகளில் மகளிர் அணியும் சிறப்பாக செயல்பட்டு கோப்பைக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.