முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கவுதம் கம்பீருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இதுகுறித்தான முழு செய்தியைப் பார்ப்போம்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைந்தது. ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார்.
கவுதம் கம்பீர் 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். அதேபோல், ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கேப்டனாக கோப்பை வென்றுள்ளார். அத்துடன் 2024 சீசனில் ஆலோசகராக செயல்பட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.
இதனால், ராகுல் ட்ராவிட் பதவி விலகிய பிறகு கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார். அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதன்பின் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. ஆனால், அதன்பின் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்திய அணி ஒரு போட்டிக்கூட வெற்றிபெறவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை கம்பீர் சந்திக்க வேண்டியதாயிற்று.
இதனையடுத்து இன்று தொடங்கிய ஆஸ்திரேலிய இந்தியா தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், கம்பீரின் பயிற்சியாளர் பதவி பறிக்கப்படும் என்ற தகவல் வெளியாகின.
அந்தவகையில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கம்பீருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். “கவுதம் கம்பீருக்கான முதல் அறிவுரை அமைதியாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் சத்தங்கள் அவரை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. உங்கள் வீரர்களைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலையிலும், உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அவர்கள் விளையாடுவதை பார்ப்பீர்கள்.
அப்போது ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவதற்கு என்ன தேவை என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். அணியின் சூழ்நிலைக்கு ஏற்றவாரு குறிப்பிட்ட சில வீரர்கள் மற்ற வீரர்களைவிட சிறப்பாக செயல்படுவாரக்ள். ஆரம்பத்தில் எனக்கும் வீரர்களைப் புரிந்துக்கொள்வதில் சிரமமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு கலாச்சாரம், மனநிலையில் உள்ளவர்கள். கடினமான சூழ்நிலைகளில் அவர்களுக்கு நம்பிக்கையாக இருந்து மேட்ச் வின்னராக கொண்டு வர வேண்டும்.” என்று பேசினார்.