T20 World Cup in USA 
விளையாட்டு

T20 உலகக் கோப்பை அமெரிக்காவில்!

கே.என்.சுவாமிநாதன்

இருபது நாடுகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் உலகக் கோப்பை லீக் சுற்றில் 40 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் 12, அரையிறுதி போட்டிகள் 2, இறுதிப் போட்டி 1 என்று மொத்தம் 55 போட்டிகள். அமெரிக்கா, கனடா, உகாண்டா என்று மூன்று அணிகள் இந்த உலகக் கோப்பையில் முதன் முறையாக பங்கேற்கின்றன.

இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 11.25 மில்லியன் அமெரிக்கன் டாலர். இது 2022ஆம் ஆண்டு நடந்த போட்டி பரிசுத் தொகையை விட இரு மடங்கு. இதில் கோப்பையை வெல்லும் அணி அடையப் போவது 2.45 மில்லியன் அமெரிக்கன் டாலர். ஐபிஎல் போட்டிகளை விட பரிசுத் தொகை அதிகம்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை 2007ஆம் வருடம் ஆரம்பித்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த போட்டியில், தோனி தலைமையில் விளையாடிய இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த முறை இந்தியா கோப்பையைக் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அமெரிக்கா கிரிக்கெட் விளையாடும் நாடல்ல. ஆனால், ஏன் உலகக் கோப்பை அமெரிக்காவில் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்தது. கால்பந்து அமெரிக்காவில் அதிகம் அறியாத விளையாட்டு, பின் ஏன் இதனை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், 36 இலட்சம் மக்கள் அமெரிக்காவில் நடந்த கால்பந்து போட்டியைக் கண்டு களித்தனர். இது அமெரிக்காவில் கால்பந்து வளர வழி வகுத்தது. இதைப் போலவே கிரிக்கெட் அமெரிக்காவில் வளருவதற்கு டி20 உலகக் கோப்பை உதவி செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டு அமெரிக்காவிற்கு புதியதல்ல. 18வது நூற்றாண்டின் இறுதியிலும் 19வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரிட்டிஷ் அமெரிக்காவின் 13 காலனிகளிலும் கிரிக்கெட் விளையாட்டுகளை நடத்தி வந்தன. அமெரிக்கப் புரட்சியின் போது ஜார்ஜ் வாஷிங்டன் தன்னுடைய படை வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாகக் கூறுகிறார்கள்.

1844ஆம் வருடம் அமெரிக்கா, கனடா நாடுகளிடையே ப்ளுமிங்க்டேல் பார்க் நியூயார்க்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண வந்தவர்கள் 20,000 பேர். இந்தப் போட்டிக்கு 1,20,000 அமெரிக்கன் டாலர் பந்தயம் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா, கனடா இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இங்கிலாந்த் கிரிக்கெட் அணிகள் 1859, 1868 மற்றும்1872ஆம் வருடம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வருகை தந்தனர். அப்போது நடந்த போட்டிகளில் அமெரிக்கா, கனடா அணிகள் 22 வீரர்கள் கொண்ட அணி வைத்துக் கொள்ள அனுமதி தந்தனர்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேஸ்பால் அமெரிக்காவில் பிரபலமடைய கிரிக்கெட் பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டாக மாறியது. தட்டையான கிரிக்கெட் மட்டையில் ஆரம்பித்த பேஸ்பால் உற்பத்திக்கு வசதியான உருண்டை மட்டையாக உருவெடுத்தது. அமெரிக்காவில் பிலடெல்பியா, ஜெர்மன் டவுன், மெரியன், பெல்மாண்ட் என்று நான்கு பிரபல கிரிக்கெட் க்ளப்புகள் இருந்தன. காலப் போக்கில் பிரபல க்ளப்புகள் மற்ற விளையாட்டுகளுக்குத் தாவின.

பிலடெல்பியா கிரிக்கெட் க்ளப்பிற்கு விளையாடிய “ஜான் பார்ட்டன் கிங்” சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பௌலராக பிரபலமடைந்தார். ஸ்விங் பௌலிங்கில், எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்ததாகக் கூறுவர். இவரைப் பற்றி ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மன், “அமெரிக்காவின் மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்” என்று கூறியுள்ளார்.

1965ஆம் வருடம் ஐசிசியின் இணை உறுப்பினராக அமெரிக்கா அங்கீகாரம் பெற்றது. ஐசிசி நடத்திய பல உலகக் கோப்பை பந்தயங்களில் கலந்து கொண்ட அமெரிக்கா, முதல் சுற்றிலேயே, பல முறை வெளியேறியது. இந்த வருடம் வங்கதேசத்துடன் நடந்த டி20 போட்டிகளில், வங்கதேசத்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது அமெரிக்கா. அமெரிக்காவின் கிரிக்கெட் அணியில் நால்வர் இந்திய வம்சா வளியினர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT