ICC Women's T20 World Cup  
விளையாட்டு

இந்திய மகளிர் அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது! கோலோச்சும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள்!

ராஜமருதவேல்

துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி டி 20 உலகக்கோப்பை மகளிர் அணிக்கான லீக் போட்டியில் (அக்.13), மதியம் 3.30 மணியளவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதுவரை தோல்வி அடையாத பலமிக்க இங்கிலாந்து அணியும் பலமற்ற ஸ்காட்லாந்து அணியும் பலப்பரீட்சையில் இறங்கின. முதலில் ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கில் இறங்கியது.

ஸ்காட்லாந்து அணியின் சாரா பிரைஸ், கேப்டன் பிரைஸ் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பிரைஸ் ஜோடியை பிரித்த பின்னர் அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு சுருண்டனர். ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது ஸ்காட்லாந்து அணி. இங்கிலாந்து அணியில் சோபி எக்லாஸ்டின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 'இதெல்லாம் எங்களுக்கு ஒரு டார்கெட்டா' என்று மிக அலட்சியமாக ரன்களை குவிக்க தொடங்கியது. துவக்க ஜோடியாக களமிறங்கிய மைய்யா புர்ச்சர் 34 பந்துகளில் 12 பவுண்டரிகளை விளாசி 62 ரன்களை குவித்தார். மறுபுறம் டேனியல் வியாட் 7 பவுண்டரிகளை விரட்டினார். எந்த விக்கட் இழப்புமின்றி இந்த ஜோடி பத்து ஓவர்களில் வெற்றியை எட்டியது.

மறுபுறம் லீக் சுற்றில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இம்முறையும் கோப்பையை தக்க வைக்க முயற்சி செய்கிறது. இந்திய அணி இம்முறை வெற்றி, தோல்வி என இரண்டையும் சுமந்து அரையிறுதிக்கு செல்லுமா இல்லையா? என்று மதில்மேல் பூனையாக உள்ளது. முதலில் பேட்டிங்கில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன்களை குவித்தது. அவர்களால் அதிரடியாக ஆட முடியாதபடி இந்திய அணியின் பந்து வீச்சு இருந்தது.

பெத் முனியை அவுட் 2 ரன்களிலும், ஜார்ஜியாவை 0 ரன்னில் அவுட் ஆக்கினாலும் வழக்கம் போல ஆஸ்திரேலியஅணி வீராங்கனைகள் ஒவ்வொருவரும் இறுதிவரை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தஹ்லியா மெக்ராத், எல்லிஸ் பெர்ரி இருவரும் தலா 32 ரன்கள் எடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் நல்ல ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலிய அணி. இறுதியில் 8 விக்கட்கள் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் , தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து சேசிங்கை துவங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணி போலவே ஆடினாலும் இன்னும் சற்று பயிற்சி தேவைப்படுகிறது. ஸ்மிருதி மந்தனா பொறுப்பில்லாமல் 6 ரன்களில் வெளியேறினார். ஷாபாலி வர்மா, ஜெமிமா எல்லாம் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் வெளியேறினர். கேப்டன் ஹர்மன் பிரித்சிங் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் எடுத்தார். தீப்தியும் அவருக்கு உறுதுணையாக ரன்களை எடுத்தார். இந்த ஜோடி பிரிந்ததும் இந்திய அணி மோசமாக சரிந்தது. ரிச்சா கோஷ் 1 ரன்னில் வெளியேற 'நாங்கள் மட்டும் ரன் அடிக்க வேண்டுமா' என்று அருந்ததி ரெட்டி, ஷிரேயங்கா பாட்டில், ராதா யாதவ் என தொடர்ச்சியாக 0 ரன்னில் மூவரும் அவுட்டாகி வெளியேற இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது போனது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து பின்தங்கியது.

இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை பெருமளவில் இழந்துவிட்டது. அடுத்த வரும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வெற்றிக் கொண்டால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பாகிஸ்தான் அணி வெல்லுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT