Australia and West Indies 
விளையாட்டு

வங்கதேசத்தை கவிழ்த்தது மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தானை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா!

ராஜமருதவேல்

ஷார்ஜாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை, அக்.11 வெள்ளி அன்று மதியம் 2 மணியளவில் துவங்கிய லீக் சுற்றில் வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணியினர் நடந்து கொண்டிருப்பது டி20 மேட்ச் என்பதை முழுவதும் மறந்து விட்டு டெஸ்ட் கிரிக்கெட் போல மிக நிதானமாக ஆடினர். முதல் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் வங்கதேசம் எடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் வெறும் 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தனர்.

இப்படி நிதானமாக ஒரு புறம் சென்றால் விக்கட்டுகளும் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்தன. ஆட்ட நேர இறுதியில் 8 விக்கட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது வங்கதேசம். கேப்டன் நிகர் சுல்தானா வங்காளதேச அணியில் அதிகபட்சமாக 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரது பேட்டிங் சகாக்களிடமிருந்து அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. திலாரா அக்தர் மற்றும் சோபனா மோஸ்டரி ஆகியோரிடமிருந்து நம்பிக்கைக்குரிய தொடக்கங்கள் இருந்தபோதிலும், பேட்டிங் வரிசை நிலையாக நிற்க தவறியது.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது, கரிஷ்மா ராம்ஹரக் 17 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஃபி ஃப்ளெட்சர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக துவக்கத்தை கொடுத்து அடித்து ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 12.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி 34 ரன்கள் எடுத்தார். ஸ்டாபானி டெய்லர் 27 ரன்களுடன் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த டியான்ட்ரா டாட்டின் 7 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் விளாசி வெற்றியை சுவைத்தார். இந்த போட்டியின் வெற்றி மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தான் அணியை அப்பளம் போல நொறுக்கியது ஆஸ்திரேலியா அணி:

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை, அக்.11 வெள்ளி அன்று இரவு 7 மணியளவில் துவங்கிய மற்றொரு லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி மிகப் பரிதாபமாக விளையாடியது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் முனிபா அலி சித்திக் பொறுப்பற்ற முறையில் விளையாடி துவக்கத்தில் 7 ரன்களுடன் வெளியேறினார். அதன் பின் அப்படியே விக்கெட்டுகள் சரிந்தன.

இடையில் வந்த ஆலியா ரியாஸ் 26 ரன்கள் எடுத்தும், இராம் ஜாவேத் 12 ரன்கள் எடுத்தும் சிறிது ஆறுதல் அளித்தனர். அதன் பின் அவர்களும் வெளியேற எனக்கு எதற்கு வம்பு என்று நஷ்ரா சுந்து டக் அவுட்டாகி வந்த வேகத்தில் திரும்பி சென்றார். திணறி திணறி பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை மட்டும் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 21 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி, பாக் அணியின் பந்துகளை நாலா புறமும் சிதற விட்டார். 37 ரன்கள் எடுத்த உடன் காயம் காரணமாக வெளியேறினார். பெத் முனி 15 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பேரியும் ஆஷ்லேவும் எளிதில் வெற்றியை பெற்றுத் தந்தனர். ஆட்ட நாயகியாக ஆஷ்லே கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டார்.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT