சாம்பியன்ஸ் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதையடுத்து, இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? செல்லாதா? என்பது குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இந்திய அணியைத் தாக்கி பேசியுள்ளார்.
இந்தமுறை ஐசிசி சாம்பியன் ட்ராபி போட்டிகளை எடுத்து நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகள் நடத்தும் மைதானத்திற்கான இடங்களை இறுதி செய்தது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்.
இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராஃபி கூட ஹைப்ரிட் முறையில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி பேசியுள்ளார், “பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று 50 உலகக் கோப்பை தொடரில் விளையாடியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக வரவேண்டும். நான் இதுவரைப் பார்த்த இந்திய வீரர்களின் நேர்காணல்படி, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.
எனினும், இந்திய நாட்டின் கொள்கைகள், அவர்கள் அரசு எடுக்கும் முடிவு பொறுத்து தான் இந்தியா இங்கு வருவது குறித்து யோசிக்க முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்வது போல், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது என்றால் அது பாகிஸ்தானில் மட்டும் தான் விளையாடப்பட வேண்டும்.
இந்தியா இங்கு வர விரும்பவில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே தொடரை நடத்துவது தான் சரியாக இருக்கும். இந்தியா தொடரில் பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்து விடாது.” என்று முதலில் இந்திய அணியின் வீரர்களைப் பற்றி இனிமையாக பேசிய இவர், கடைசியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை தாக்கிப் பேசியுள்ளார்.