இந்தியாவில் நடைபெறும் பிரபலமான விளையாட்டுத் தொடர்களில் புரோ கபடியும் ஒன்று. இந்தத் தொடரின் மூலம் பல திறமையுள்ள கபடி வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. புரோ கபடியில் தமிழக வீரர்கள் பலருக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியாவில் கிரிக்கெட்டைப் போலவே கபடிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கபடியில் இந்தியா தான் உலக சாம்பியன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்தியக் கிரிக்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது ஐபிஎல் தொடர் என்றால் அது மிகையாகாது. அதே போல் கபடிக்கும் இந்திய அளவில் புரோ கபடி தொடர் நடத்தப்படுகிறது. இத்தொடரின் அறிமுகத்திற்குப் பிறகு தான் பலருக்கும் கபடி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
புரோ கபடி தொடரில் இந்தியாவின் மூலை முடுக்குகளில் மறைந்து கிடந்த பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புது கிடைத்தன. தொடக்கத்தில் தமிழக வீரர்களுக்கு புரோ கபடியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த தொடர்களில் தமிழக வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஒருசில வாய்ப்புகள் கிடைத்தன. இதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தர்மராஜ், சேரலாதன், சந்திரன் ரஞ்சித், பிரபஞ்சன் மற்றும் அஜித் போன்ற வீரர்கள் தமிழ்நாட்டின் பெயரை நிலைநாட்டினார்கள். இதில் சேரலாதன், பாட்னா அணியின் கேப்டனாக செயல்பட்டு ஒருமுறை கோப்பையையும் கைப்பற்றி இருந்தார். 9வது புரோ கபடி கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் அணியில் அஜித் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
இவர்களைத் தொடர்ந்து உள்ளூரில் விளையாடும் தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர்களும் அடுத்தடுத்து புரோ கபடியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் கடந்த ஆண்டு பாட்னா அணியில் இடம் பிடித்திருந்த சுதாகர் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். இருப்பினும் சில வீரர்களுக்கு களத்தில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா அணியும் வாங்கியது. ஐசிஎப் அணி வீரர் தியாகராஜனை ரூ.13.1 இலட்சத்திற்கும், தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் பாபுவை ரூ.13 இலட்சத்திற்கும் பாட்னா அணி ஏலத்தில் எடுத்தது.
இதுதவிர தமிழ் தலைவாஸ் அணியில் ராம்குமார் மாயாண்டி மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புரோ கபடியில் தமிழக வீரர்களின் இந்த எழுச்சி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இனிவரும் காலங்களில் கபடியின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.