இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி-20 சர்வதேச ஒருநாள் போட்டியின் மூன்றாவது ஆட்டம் குவாஹாட்டியில் இன்று நடைபெறுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றியை உறுதிசெய்து தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் வெற்றியை தடுத்து நிறுத்த முயற்சிக்கக்கூடும்.
டி-20 ஒருநாள் சர்வதேச போட்டியில் இதுவரை நடந்துள்ள இரண்டு போட்டிகளிலும் (விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம்) இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. தொடர்ச்சியாக போட்டிகளை சந்தித்து வந்ததால், ஆஸ்திரேலிய வீரர்கள் டி-20 போட்டிகளில் சோர்ந்துபோய் இருக்கக்கூடும். என்று எதிர்பார்த்த நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் எடுத்தார். எனினும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெய்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வேட் அரைசதம் அடித்தனர். ரிங்கு சிங், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
முதல் இரண்டு போட்டிகளை சிறப்பாக வழிநடத்திச் சென்றதற்காக கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பாராட்டுகள் குவிந்தன. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் சூரியகுமார் அதிரடியாக ஆடி 80 ரன்கள் குவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் விளையாட டிராவிஸ் ஹெட்டை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித்தையும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தக்கவைக்க அணியின் கேப்டன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கிளென் மாக்ஸ்வெல் போன்ற நல்ல ஆடக்காரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை. இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னிலை ஆட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில் டிம் டேவிட் மற்றும் ஸ்டோனிஸ்தான் நின்று ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான திட்டமிடுதல் மட்டும் போதாது, அதை திறமையாக செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் வெற்றிபெற முடியாது. போதிய செயல்திறன் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியை பொருத்தவரை ஜெய்ஸாவ், ருதுராஜ், இஷான் கிஷன் உள்ளிட்ட முன்னிலை ஆட்டக்காரர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஸர் படேல், ரவி விஷ்ணோய் இருவருமே திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
குவாஹாட்டியில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.