சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி
சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி 
விளையாட்டு

ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது இந்தியா!

கே.சூரியோதயன்

பார்படாஸ் நகரில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அணியின் தலைவர் ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக சொற்ப ரன்களில் அவுட் ஆக, இந்தப் போட்டித் தொடர் முழுவதும் சரியாக விளையாடாத விராட் கோலி நிதானமாக விளையாடி 59 பந்துகளில் 76 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்த்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வழக்கம்போல் பூம்ரா தனது அபார பந்து வீச்சை இந்தப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக் கோப்பை டி20 கோப்பையை கைப்பற்றியது

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற விராட் கோலி, இதுவே தனது சர்வதேச டி20 கடைசி போட்டி என்று அறிவித்து உள்ளார். மேலும் பேசிய அவர், ‘அடுத்தத் தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில ஆற்றல்மிகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி நமது இந்திய தேசியக் கொடியை உயரே பறக்க விடுவார்கள்’ என்று கூறி உள்ளார்.

சுமார் 33 ஆண்டுகளாக ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 போட்டிகளில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை. அதேபோல், ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் தென்னாப்பிரிக்கா வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனாலும், அப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது நினைவிருக்கலாம். இந்த நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை வென்று இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது.

தென்கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசியை பற்றித் தெரியுமா?

பக்திக்கு மெச்சி கம்பத்தில் காட்சி தந்த முருகப்பெருமான்!

பெரும்பாலான இந்தியர்கள் ஏன் ஏழையாகவே இருக்கிறார்கள் தெரியுமா? 

உறவுகளைப் பராமரிக்க உன்னத ஆலோசனைகள்!

கடந்த கால துன்பங்களை மறந்து, வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்துவதற்கான யுத்திகள்! 

SCROLL FOR NEXT