Indian Women Team  
விளையாட்டு

உலகை வெல்லக் காத்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ரா.வ.பாலகிருஷ்ணன்

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. கோப்பையை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்க்க இந்திய வீராங்கனைகள் தயாராக உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி டி20 உலகக்கோப்பையை வென்று மகுடம் சூட்டியது. இதனால் பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்ற இந்தியாவின் கனவும் நிறைவேறியது. ஆடவர் அணி தனது கனவை நனவாக்கியது போல், மகளிர் அணியும் ஐசிசி கோப்பைக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வருகின்ற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி முடிவடைகிறது.

டி20 உலகக்கோப்பையில் 10 அணிகள் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. கடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் கோப்பையை பறிகொடுத்த இந்திய அணி, இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தையும், அக்டோபர் 6 இல் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

சாதிக்குமா இந்தியா:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய வீராங்கனைகள் வெற்றியைப் பெற்று கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறை செய்த தவறை இம்முறை திருத்திக் கொண்டு பேட்டிங், பௌலில் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி துடிப்பாக செயல்படும் பட்சத்தில் கோப்பை நிச்சயமாக நம் வசமாகும். சாதிக்கத் துடிக்கும் இந்திய வீராங்கனைகளுக்கு இது நல்வாய்ப்பாகும்‌.

பரிசுத்தொகை:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை மகளிர் உலக்கோப்பை பரிசுத்தொகையை சுமார் 225% உயர்த்தியுள்ளது ஐசிசி. கடந்த 2023 ஆம் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ரூ.8.4 கோடி பரிசுத்தொகை தரப்பட்டது. ஆனால் நடக்கப் போகும் உலகக்கோப்பைத் தொடரை வெல்லும் அணிக்கு ரூ.19.6 கோடி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ.10 கோடியும், அரையிறுதியில் தோற்கும் இரண்டு அணிகளுக்கும் தலா ரூ.5.7 கோடியும் தரப்படும்.

இதுதவிர லீக் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.26 இலட்சம் அளிக்கப்படும். மேலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறாத 6 அணிகளுக்கு, புள்ளிகளின் அடிப்படையில் ரூ.11.3 கோடி பிரித்து அளிக்கப்படும். மொத்தமாக இந்த உலகக்கோப்பையின் பரிசுத்தொகை ரூ.67 கோடி. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.20.5 கோடி பரிசுத்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 225% அதிகமாகும்.

வருடத்தில் இருமுறை சூரிய பகவான் வழிபடும் ஸ்ரீமுக்தீஸ்வரர்!

கிரிக்கெட்டை கருவறுத்த Baseball! 

தூய தமிழ் போயே போச்சு! எங்கும் எதிலும் 'தமிங்கிலம்' வந்தாச்சு!

நாராயணீயம் காவியம் தோன்றிய வரலாறு தெரியுமா?

Hormone-கள் சமநிலையின்மையின் அறிகுறிகள்! 

SCROLL FOR NEXT