India and Pakistan teams 
விளையாட்டு

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

பாரதி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவில் நடத்தலாமா என்ற பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.

50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும்.

இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த அசாதாரண சூழலை புரிந்துக்கொண்டு இந்திய அணியின் போட்டிகளை மட்டும் இந்தியாவிலேயே நடத்த ஐசிசி முடிவெடுக்கும் என்று சொல்லப்பட்டது. இதனால், இந்திய அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேபோல் வீரர்களும் அழுத்தம் இல்லாமல் விளையாடுவார்கள் என்பது அவர்களின் எண்ணம்.

இப்படியான நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் இந்திய அணி இங்கு வரவில்லை என்றால், நாங்கள் இனி இந்தியா செல்ல மாட்டோம் என்பதுபோல பேசியிருந்தார்.

அந்தவகையில் தற்போது இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்களும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு நாடுகளுக்கு நடுவில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இது நடந்தால், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்தியாவில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்துவதற்கான மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குறைந்தபட்சம் இந்திய அணியாவது சாம்பியன்ஸ் ட்ராபியில் கலந்துக்கொள்ளும்.

ஆனால், பாகிஸ்தான் அணி இவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதாலும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளதாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சொல்வதை பிசிபி கேட்கவும் வாய்ப்புள்ளது.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT