ஐபிஎல் 16வது சீசன் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில் 2 பந்துகளுக்கு 10 ரன்கள் அடித்தால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து, சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற உறுதுணையாக இருந்தார்.
ஜடேஜா கடைசி 2 பந்தில் அடித்த அந்த வின்னிங் ஷாட்தான் இப்போது வரை ரசிகர்ளாகல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஜடேஜா அந்த ஷாட்டை அடித்து முடித்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, தோனி சந்தோஷத்தில் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினார். அந்தளவுக்கு போட்டியில் மறக்கமுடியாத ஒரு திருப்புமுனையை ஜடேஜா ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சென்னை அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சென்னை அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதே போல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ட்விட்டரில் ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் ஒரு குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.