ஐபிஎல் தொடருக்கு முன்னாள் நடைபெறும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது தொடர்பான செய்தியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு முடிவில் நடைபெறும். இதில் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அதேபோல் சில வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றது.
இதில் அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் கலந்துக்கொண்டனர். அப்போது மெகா ஏலம் குறித்தும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அனைவரும் கலந்தாலோசித்து எடுத்த முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது.
2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சீசனுக்கு முன்புத்தான் மெகா ஏலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தமாக 4 வீரர்களையும் அதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் பி.சி.சி.ஐ., தெரிவித்திருந்தது. அதன்பின்னர் 2014 சீசனுக்கு முன்பாக 5 வீரர்களையும் அதில் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றது பி.சி.சி.ஐ. இதனையடுத்து RTM - Right to Match கார்டுகளை பி.சி.சி.ஐ., அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் தங்கள் அணியில் ஆடிய ஒரு வீரரை வேறு அணி ஏலத்தில் எடுத்தாலும், அந்த கார்டு பயன்படுத்தி மீண்டும் அந்த வீரரை மீட்டுக்கொள்ளலாம் என்ற வசதி வந்தது.
இதன்படி 2018ம் ஆண்டின் மெகா ஏலத்தில், 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது 3 வீரர்களை RTM மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்றது பி.சி.சி.ஐ.,. 2022 சீசனுக்கு முன்பான மெகா ஏலத்தில் RTM கார்டு முறை கிடையாது என பி.சி.சி.ஐ., அறிவித்தது. 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம், அதில் 3 வீரர்கள் இந்திய வீரர்கள் என்று பிசிசிஐ அறிவித்தது.
அந்தவகையில் இம்முறையும் RTM கார்டை பிசிசிஐ ரத்து செய்ததாகவும், மொத்தம் 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் 4 இந்தி வீரர்கள் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.