Shikar Dhawan 
விளையாட்டு

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுப்பெறுகிறாரா ஷிகர் தவான்?

பாரதி

சமீபத்தில் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வறிப்பை அறிவித்ததுபோல, நானும் விடைபெறும் நேரம் வந்தது என்று ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான், அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர், ஷிகர். அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்து தங்க பேட் விருதையும் கைப்பற்றினார். அதேபோல் 2017ம் ஆண்டும் இந்திய அணி 2வது இடத்தைப் பிடிப்பதற்கு முக்கிய பங்காற்றிய இவர், அந்த சீசனிலும் தங்க பேட் விருது வென்றார்.

2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் தவான். அதிலிருந்து மீண்டு வந்த அவர், பின் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தடுமாறினார். மேலும் கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் போட்டிக்கு வந்தனர். இதனால், 2023ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலிருந்து விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல் தொடரிலேயே அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 6 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.8.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேப்டன் பொறுப்பையும் ஏற்றார்.

காயம் காரணமாக ஷிகர் தவான் கடந்த சீசனில் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதேபோல் இந்த சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதனால் பஞ்சாப் அணி, இளம் வீரர் சாம் கரண் தலைமையிலேயே பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கியது. இதனால் ஷிகர் தவான் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இதுகுறித்து தவான் பேசுகையில், “எனது வாழ்க்கை இப்போது மாற்றமடைந்து வருகிறது. அதேபோல் கிரிக்கெட் வாழ்க்கையும் கடைசி கட்டத்தில் உள்ளது. புதிய விஷயங்களும் நடக்கவுள்ளன. விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட காலம் வரை தான் விளையாட முடியும். இன்னும் ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தான் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இந்த சீசனில் காயமடைந்ததால், முழுமையாக விளையாட முடியவில்லை. அதனால் 5 போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பங்களிக்க முடிந்தது.

அதேபோல் காயத்தில் இருந்து குணமடைய கொஞ்சம் நேரம் தேவைப்படும். இன்னும் 100 சதவிகிதம் முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை.” என்றார்.

இவருடைய ஃபிட்னஸ் தற்போது எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லையென்பதால், பஞ்சாப் அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு ஏலத்தில் எடுக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை தவான் ஓய்வறிப்பை விடுத்தால், பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT