கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கான மோதலில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 56 ரன்களில் 109 ரன்கள் எடுத்தது, அணியின் வலுவான இலக்கிற்கு உதவியாக இருந்தது.
இந்த அதிரடி ஆட்டத்தால் மட்டுமே கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்துச் சென்றது. இதனையடுத்து கொல்கத்தாவின் அதிகபட்ச ரன்கள் என்றால், அங்க்ரிஷ் 18 பந்துகளில் அடித்த 30 ரன்களே ஆகும். இறுதியாக களமிறங்கிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுக்கும்போது 20 ஓவர்கள் முடிந்ததால், தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து, ராஜஸ்தான் அணியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 107 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடி அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேற முக்கிய காரணமானார்.
ரியான் பராக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ரஸ்ஸல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ராஜஸ்தானின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்கள். எனினும், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
அதேபோல் கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா, நரைன், வருண் கக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்து எதிரணி இலக்கை அடையவிடாமல் தடுக்க முயற்சி செய்தனர். பட்லர் கடைசி வரை நின்று அதிரடி ஆட்டத்தில் இறங்கியதால் மட்டுமே ராஜஸ்தான் அணி இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
அந்தவகையில், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி, அதில் 4 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.