இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல், தனது கவனத்தை ஏழைக் குழந்தைகளின் பக்கம் திருப்பியுள்ளார். இவர்களின் படிப்பு செலவுக்காக கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்திய பொருள்களை ஏலத்தில் விடும் புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் ராகுல். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் கே.எல்.ராகுல். சமீப காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்கத் தடுமாறி வரும் இவர், ஒருநாள் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது இவர் துலீப் டிராபியில் விளையாட இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட கே.எல். ராகுல், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சொதப்பினார். இதனால் டி20 அணியில் இவருக்கான இடம் பறிபோனது. இருப்பினும் ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக தன்னால் முடிந்ததை செய்ய நினைத்திருக்கிறார் கே.எல்.ராகுல். இதற்காக அவர் கையில் எடுத்தது கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்திய பொருள்கள் தான். அதாவது கிரிக்கெட் வீரர்கள் களத்தில் பயன்படுத்திய பேட், கிளவுஸ், ஜெர்சி ஆகியவற்றை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முயற்சி செய்துள்ளார். ராகுலின் இந்த முயற்சிக்கு அவரது மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டியும் துணை நின்றார்.
ஏலத்தில் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முன்னணி வீரர்களின் பொருள்களைப் பயன்படுத்தினார். கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள் பயன்படுத்திய பொருள்களை ஏலத்தில் வாங்க ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்சமாக விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 இலட்சத்திற்கும், பேட்டிங் கிளவுஸ் ரூ.28 இலட்சத்திற்கும் ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட் ரூ.24 இலட்சத்திற்கும், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பேட் ரூ.13 இலட்சத்திற்கும் ஏலம் போனது.
மேலும் கே.எல். ராகுலின் பேட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஜெர்சி தலா ரூ.11 இலட்சத்திற்கு ஏலம் போனது. ஏலத்தில் முடிவில் மொத்தமாக 1 கோடியே 93 இலட்சம் ரூபாய் நிதி திட்டப்பட்டது. இந்த நிதித் தொகை ஏழை எளிய குழந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில் விப்லா அறக்கட்டளையிடம் கொடுக்கப்பட்டது.
வீரர்கள் பயன்படுத்திய பொருள்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் வருவாயை, குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்த ராகுல் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.