ஃபிஃபா உலகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டார் நாட்டில் மதுவிலக்கு நிலவுகிறது. அங்கு ஹோட்டல் பார்களில் குடிக்க மட்டுமே அனுமதி உண்டு.
என்றாலும் மதுப் பழக்கம் உள்ள ஐரோப்பிய நாட்டினரும் உலகக் கோப்பை போட்டிகளில் பெருமளவு பங்கு கொள்வதால் இறுதி சுற்றுப் போட்டிக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவும் போட்டிக்கு பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மதுவகைகள் மைதானத்தில் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் உலகக் கோப்பை அதிகாரிகள். இது தொடர்பாக எம்பாப்வேவின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது.
சமீப உலகக் கோப்பை பந்தயங்களில் பெரிதும் புகழ் பெற்றவர்களில் ஒருவர் பிரான்ஸ் அணியை சேர்ந்த எம்பாப்வே. அதிக கோல் அடித்த வீரர்களுக்கான கோல்டன் பூட் எனப்படும் தங்க காலணி விருதை பெற இவருக்கு வாய்ப்பு உண்டு.
இம்முறை பிரான்ஸ் போலந்து அணிகள் மோதின. 3-1 பிரான்ஸ் வென்றது. காலிறுதிக்குள் நுழைந்தது. இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது எம்பாப்வே எடுத்த இரண்டு கோல்கள்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரிலேயே இப்படி மூன்றாவது முறை விருது பெற்றிருக்கிறார் இவர். இதற்காக அவருக்கு ஒரு கோப்பை பரிசளிக்கப்பட்டது. அந்த கோப்பையுடன் அவர் புகைப்படங்களுக்கு கொடுத்த போஸ் தான் பரபரப்புச் செய்தியானது.
சமீப வருடங்களாக ஸ்பான்சர்கள் பெயர் அச்சடிக்கப்பட்ட சட்டைகளை அணிந்துதான் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. ஒப்பந்தத்தில் நிபந்தனையாக இது குறிக்கப்படுகிறது.
தற்போது நடக்கும் உலக கோப்பை போட்டிகளில் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்று பட்வெய்ஸர் என்ற ஒரு மதுபான நிறுவனம். அந்தப் பெயர் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்த பகுதியை சாமர்த்தியமாக மறைத்தபடி எம்பாப்வே போஸ் கொடுத்தார். இது அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மதுபானத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர் எம்பாப்வே. எனவே இது தற்செயலாக நடந்திருக்க முடியாது.
அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கவும் மறுத்து வருகிறார். இதனால் உலக கோப்பை பந்தயங்களை நடத்தும் நிறுவனங்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மதுபானம் அருந்துவதில் எந்தத் தடையும் இல்லாதது பிரான்ஸ் நாடு. எனினும் பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு எம்பாப்வேவுக்கு ஆதரவாக இருக்கிறது! காரணம் பிரான்சுக்கு அவர் பெற்றுத்தரும் வெற்றிகள்.
கொள்கைக்காக - அதுவும் நல்ல கொள்கைக்காக - ஒருவர் தன்னால் இயன்ற விதத்தில் தீமைக்கு எதிரான எதிர்ப்பை காட்டுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கதுதான்.
பிரான்ஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு ஒரு ரோல் மாடலாக விளங்கி வருகிறார் எம்பாப்பே. அந்த பிம்பத்தை அவர் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எம்பாப்வே மீது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இதனால் அவருக்கு கிடைக்க கூடிய விளம்பரம் அவரது புகழை அதிகப்படுத்தும்.
சமீபத்தில் நடைபெற்றவை
காலிறுதிச் சுற்றில் பிரான்ஸ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. 2-1 கோல் கணக்கில் பிரான்ஸ், இங்கிலாந்தை வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதியானது.
காலிறுதிச் சுற்றில் பலமான போர்ச்சுகல் அணியை மொரோக்கோ வென்றதன் மூலம் சரித்திரம் படைத்தது. உலக கால்பந்து போட்டியில் அரையிறுதிச் சுற்றை முதன்முதலாக அடைந்த ஆப்ரிக்க அணியும் அதுதான். முதல் அரபு நாட்டு அணியும் அதுதான்.
**************