olympics 2024 https://www.fattiretours.com
விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் 2024: சில வியப்பூட்டும் தகவல்கள்!

S CHANDRA MOULI

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் வரும் ஜூலை 26ம் தேதி துவங்கி. ஆகஸ்ட் 11ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதோ ஒலிம்பிக்ஸ் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்களின் தொகுப்பு…

பண்டைய கிரீஸ் நாடில் கி.மு. 776ல் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் துவங்கின என்று கூறப்பட்டாலும், நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 1896ல் கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில் துவங்கின. ‘வேகம், உயர்வு, வலிமை’ இதுவே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் லட்சியம்.

ஒலிம்பிக்ஸ் போட்டி இந்த உலகுக்குச் சொல்லும் செய்திகள் ஐந்து. அவை: விளையாடும் மகிழ்ச்சி, நியாயமான ஆட்டம், மற்றவர்களை மதித்தல், உன்னதத்தை நோக்கிய பயணம், உடல், மனம், மன உறுதியை சமன் செய்தல்.

1896 ஒலிம்பிக்சில்தான்  மாரத்தான் ஓட்டம் அறிமுகமானது. அப்போது ஓட வேண்டிய தொலைவு 25 மைல். ஆனால், தற்போது மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 26 மைல் 385 கெஜம் (அதாவது 42,195 மீட்டர்) ஆக அதிகரிக்கப்பட்டு விட்டது.

ரோமானியப் பேரரசை மன்னன் நீரோ ஆண்டபோது, அவரும் ஒலிம்பிக்கில் ரதம் ஓட்டும் போட்டியில் பங்கேற்றார். பாதியில் ரதத்தில் இருந்து விழுந்துவிட்டாலும், மன்னர் தானே போட்டியில் வென்றதாக அறிவித்தார்.

கி.பி. 293ல் ரோமானியப் பேரரசர் முதலாம் தியோடொசியஸ்  ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தடை விதித்ததாகக் கூறப்பட்டாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்கிறார்கள்.

முதல் நவீன ஒலிம்பிக்சில் நடந்த 43 போட்டிகளில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 வீரர்கள் பங்கேற்றனர். 1900 முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் துவங்குவதற்கு கட்டியம் கூறும் வகையில்  கிரீசில் உள்ள ஜெரா கோயில் வளாகத்தில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்படும் முறை பாரம்பரியமானது. சூரிய ஒளியை, கண்ணாடி மூலமாக திசை திருப்பி, தீபத்தை வெப்பமூட்டி, பற்றச் செய்வதுதான் மரபு.

1904ம் வருட ஒலிம்பிக்சில் பங்கேற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஜார்ஜ் லூயிஸ் ஐசர். இவருக்கு கால் ஊனம் காரணமாக மரத்தால் ஆன கால் பொறுத்தப் பட்டிருந்தது. இருந்தபோதிலும்,  ஒரே நாளில் 6 பதக்கங்கள் பெற்று அவர் சாதனை புரிந்தார்.

1912ம் ஆண்டு வரை போட்டியில் வென்றவர்களுக்கு  சுத்த தங்கத்தால் ஆன பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன் பின் தங்க முலாம்தான்!

1904ம் ஆண்டிலிருந்துதான் போட்டியில் வெல்பவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அளிக்கும் வழக்கம் தொடங்கியது.

1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்), 2020 (கொரோனா) ஆகிய ஆண்டுகளில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் பேட்டிகள் நடைபெறவில்லை.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் அதிகாரபூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போட்டி நடக்கும் நாட்டின் மொழி ஆகியவைதான்.

ஜானி விஸ்முல்லர் ஹாலிவுட்டின் பன்னிரண்டு டார்ஜான் படங்களில் நடித்த நட்சத்திரம். அவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட. 1920களில்  ஒலிம்பிக்சில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார்.

1936 பெர்லின்  ஒலிம்பிக்சில் நடைபெற்ற விசித்திரம் இது. இரண்டு ஜப்பானிய விளையாட்டு வீரர்கள் போல்வால்ட் என்ற  கோலூன்றித் தாண்டும் போட்டியில்  இரண்டாமிடம் பிடித்தனர். அவர்களுக்கிடையே மீண்டும் போட்டி நடத்தி, இரண்டாமிடம் பெற்றவரைத் தீர்மானிப்பதற்கு பதிலாக வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பாதியாக வெட்டி, ஆளுக்கு அரை வெள்ளிப் பதக்கமும், அரை வெண்கலப் பதக்கமும் ஓட்ட வைத்து இருவருக்கும் கொடுத்துவிட்டார்கள்.

ஒலிம்பிக் கொடியில் வெள்ளைப் பின்னணியில் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிற  வட்டங்கள் இருப்பதற்குக் காரணம் இவற்றில் ஏதாவது ஒரு நிறமாவது அனைத்து நாட்டு தேசியக் கொடிகளிலும் இடம்பெற்றிருக்கும் என்பதால்தான்.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT