கபடி இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. குறிப்பாக ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பெயர்போன தமிழ்நாட்டில் கபடி என்பது மற்றொரு பாரம்பரிய விளையாட்டாகும்.
இந்த விளையாட்டு ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு கபடி கபடி என்று கூறிக்கொண்டே சென்று அவர்களை தொட்டு விட்டு தன் அணிக்கே திருப்பி வந்துவிடுவது . தொட்டவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். ஒருவேளை எதிர் அணியைச் தொடச் சென்றவனை அமுக்கி வெளியேற்றினால் அவர்களுக்கு ஒரு பாயின்ட் கிடைக்கும்.
ஒரு அணியில் ஏழு பேர் இருப்பார்கள். இது ஒரு 40 நிமிடப் போட்டி. ஆனால் கிராமப்புறத்தில் விளையாடும் சிறுவர்கள் தங்களுக்கென ஒரு விதிமுறையை வைத்துக்கொள்வார்கள். அங்கு அதுதான் மிக சுவாரசியமானதும் கூட.
வீரத்தையும் விவேகத்தையும் வளர்க்கும் இந்த கபடி போட்டி முதன்முதலில் தமிழர்கள்தான் கண்டுபிடித்தது. குறிப்பாக பண்டைய தமிழர்களின் முல்லை புவியியல் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே பிரபலாமாக விளையாடப்பட்டது. இப்போது கபடி தெற்கு ஆசியா வரை பரவி இருக்கிறது என்றே கூற வேண்டும்.
கபடி உருவான கதை
எப்படி தமிழர்களுக்கு இப்படி ஒரு விளையாட்டை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் வந்ததென்று தெரியுமா?
நம்முடைய பண்டைய தமிழர்கள் தங்கள் வீரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுவதற்கு காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டை கொண்டுவந்தனர். இந்த விளையாட்டு பல இன்றும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் ஜல்லிகட்டு போட்டிகள் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வருகிறது. கபடி பற்றிய கதையில் ஜல்லிகட்டு எங்கு நடுவில் வந்தது என்றுதானே தோன்றுகிறது. ஆனால், கபடி விளையாட்டின் தோன்றுவதற்கு ஜல்லிகட்டுதான் முதன்மையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு காளையை அடக்கும் விளையாட்டு என்பதால் பயிற்சி எடுக்கும்போதெல்லாம் காளையை அழைத்து வருவது கஷ்டம். ஆகையால் இளைஞர்கள் பயிற்சி செய்யும்போது இன்னொருவரை காளையாக பாவித்து அடக்கினார்கள். அங்கு ஆரம்பித்ததுதான் கபடி. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியும் சில விதிமுறைகள் உருவாக்கியும் கபடி என்ற இன்னொரு விளையாட்டையும் கண்டுப்பிடித்தார்கள், தமிழர்கள்.
கபடி விளையாட்டுக்கென தனிப்பாட்டு
தென்மை குடிகளான தமிழர்கள் நல்லது, கெட்டது என எல்லாவற்றுக்கு மெட்டுகட்டி பாடுவது தமிழர்களின் பாரம்பரியத்திலேயே உள்ளது. இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாடல்களை கண்டுப்பிடித்த தமிழர்கள் கபடிக்கென்றும் ஒரு பாடலைக் கண்டுபிடித்தனர். அதுதான்,
“நாந்தான் வீரன்டா..
நல்லமுத்து பேரன்டா..
வெள்ளி சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிக்கட்ட வாரன்டா..
சடுகு சடுகுடு சடுகுடு சடுகுடு...”
மற்றொரு பாடல்:
“கீத்து கீத்துடா..
கீரைத் தண்டுடா..
நட்டு வச்சன்டா..
பட்டு போச்சுடா
போச்சுடா போச்சுடா..”
என்ற பாடல்கள் கபடிக்காக நம் முன்னோர்கள் பாடிய பாடல்கள்.
ஆடுகளம் எப்படி இருக்க வேண்டுமென்று சில விதிமுறைகளும் உண்டு. ஆடுகளம் மேடு பள்ளம் இல்லாத சமதள தரையாக இருக்க வேண்டும். அதேபோல் கான்கிரீட் தரையில்லாமல் மண் தரையாக இருப்பது அவசியம். ஆண்களுக்கான ஆடுகளம் 13மீ x 10 மீ பரப்பளவு இருக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கான ஆடுகளம் 11 மீ x 8 மீ பரப்பளவாக இருக்க வேண்டும். எல்லைக் கோடுகளும் மற்ற கோடுகளும் 5 செ.மீ அளவில் இருக்க வேண்டும்.
கபடி உலகக் கோப்பை:
நாளடைவில் கபடி தெற்கு ஆசிய அளவில் மிகவும் பிரபலாக ஆனது. முதலில் தமிழ்நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட கபடி, இந்தியா முழுவதும் ரசிகர்களை கவரத்தொடங்கியது. 1939 ம் ஆண்டு அமராவதியை தளமாகக் கொண்ட ஒரு விளையாட்டு அமைப்பால் சர்வதேச அங்கீகார்த்தைப் பெற்றது கபடி.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது கபடி ஒரு நிகழ்வாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1952 ம் ஆண்டு ஆண்களுக்கான தேசிய கபடி போட்டி ஆரம்பமானது. பின்னர் 1955ம் ஆண்டு பெண்களுக்கான தேசிய கபடி போட்டி தொடங்கியது.
இதன் பின்னர் முதன் முதலாக 2004ம் ஆண்டு கபடிக்கான உலகக் கோப்பை நடைபெற்றது. இந்த உலகக்கோப்பையில் இந்தியா, ஈரான் மற்றும் பாகீஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்குப்பெற்றன. இதுவரை 2004, 2007, 2010, 2013 என நான்கு முறை கபடி உலகக் கோப்பை நடந்துள்ளது. இந்த நான்கு போட்டிகளிலுமே இந்திய தான் வெற்றிப் பெற்றது.
கபடி கவிதா செல்வராஜ்
கபடியை மையமாகக் கொண்டு இதுவரை ஒக்கடு (2003), கபடி கபடி(2003), கில்லி(2004), வெண்ணிலா கபடிக் குழு (2009), பீம்லி கபடி ஜாட்டு (2010) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்களை கவிதா செல்வராஜ் அவர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான ’தயான் சந்த்’ விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவிதா செல்வராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை ஆவார். 25 வருடங்கள் கபடி விளையாட்டில் உள்ள கவிதா, கடந்த 13 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளராக உள்ளது. ஆசிய தங்கப்பதக்கம், 2003 இந்திய கபடி போட்டியின் பயிற்சியாளராக சென்று தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். 2007 2010 தொடர்ந்து இந்திய கபடி குழுவின் பயிற்சியாளராக பணிப்புரிந்து தங்கப்பதக்கம் வென்றுக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து நான்கு ஆண்டு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த முதல் பயிற்சியாளர் என்ற சாதனைப்படைத்தவர் கவிதா செல்வராஜ். அதேபோல், ’தயான் சந்த்’ விருது பெறும் முதல் தமிழக வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு பயிற்றுநாராக உள்ளார் கவிதா செல்வராஜ்.