ஏழு நாடுகள், 120 வீரர்கள் அதில் ஒரே தமிழக வீரர்
உலகிலேயே மிக உயரமான ஏரி பாங்காங் ஏரி தான். இது லடாக்கில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு முதல் ‘பாங்காங் மாரத்தான் போட்டி’ நடைபெற்று வருகிறது. இது "உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மாரத்தான் போட்டி" என்ற தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இந்தாண்டு நடந்த இந்த போட்டியில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் நமது தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரரும் பங்கேற்று இருக்கிறார் என்பது பெருமைக்குரியது தானே! யார் அந்த வீரர்? அவர் இந்த போட்டியில் கலந்து கொண்டதற்கான நோக்கம் தான் என்ன?
‘பாங்காங் மாரத்தான் போட்டி’ 2024
கடந்த ஆண்டு முதல் முறையாக லடாக்கின் மிக உயரமான உறைந்த ஏரியில் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக அதே பாங்காங் ஏரியில் மாரத்தான் போட்டி இந்த மாதம் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியானது லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் அரசு மற்றும் 14 கார்ப்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்மி ஆகியவை இணைந்து மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் என 2 பிரிவுகளாகக் கொண்டு நடத்தப்பட்டது. பனிப்பாறைகள் உருகுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மராத்தான் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பாங்காங் ஏரி பகுதியைச் சேர்ந்த மான், மெராக், ஸ்பாங் மிக், ஃபோப்ராங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியின் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை செயலாளர் ரவீந்தர் குமார் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு 5 கிமீ தூரத்திற்கும் சூடான நீர் புள்ளிகள் அமைக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் நோக்கத்தோடு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வீரர்:
லடாக் உறைபனி ஏரியில் நடத்தப்பட்ட இந்த ஆண்டுக்கான மாரத்தான் கின்னஸ் போட்டியில் தமிழக வீரர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். சென்னையை அடுத்த மணிமங்களத்தைச் சேர்ந்தவர் திருலோகச் சந்திரன். மலை ஏறும் வீரரான இவர் இந்த போட்டியில் மிகவும் துணிச்சலாக கலந்துகொண்டு 21 கி.மீ வரை ஓடி பந்தய தூரத்தைக் வெற்றிகரமாக கடந்துள்ளார். இது குறித்து இவர் அளித்த பேட்டியில் நான் கடந்த 30 ஆண்டாக மலை ஏறும் முயற்சியில் பல சாதனைகளைப் செய்து வருகிறேன். நான் அடுத்ததாக ‘மௌன்ட் எவரஸ்ட்’ ஏறுவதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கு மிகவும் உதவியாக இருக்கும் நமது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் என்னைக் அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில் நான் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறேன், இந்த ஆண்டுக்கான பாங்காங் லே லடாக் மாரத்தான் போட்டியில் தொடர்ந்து 21கி.மீ ஓடி உலக சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கிறேன்.
முன்னர் நான் தமிழகத்தின் சார்பாக 2004 ஆம் ஆண்டு ‘மௌன்ட் எவரெஸ்ட்’ மாரத்தானில் கலந்து கொண்டு உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். ஆனால் அந்த போட்டியை விட இந்த பாங்காங் போட்டி எனக்கு மிகவும் கடுமையானதாக இருந்தது. குளிர் காலம் என்பதால் இந்தப் பகுதியில் மிகவும் அதிக குளிர் பனியின் மேல் பகுதியில் ஓடுவதும், பனிப்புயலை எதிர்கொண்டு ஓடுவதும் மிகவும் சவாலாக அமைந்தது.
நான் இந்த போட்டியில் கலந்துகொண்டதன் முக்கிய நோக்கமே உலகம் வெப்பமயமாதலைக் குறைக்க வேண்டும் என்பது தான். இங்கு வாழும் மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பனிக்கட்டியை உருக்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே ‘Go green, think green, keep the environment green’ என்பதுதான் இந்த போட்டியில் நான் கலந்துகொண்டதன் முக்கிய நோக்கமாகும். மேலும் நான் இனிவரும் போட்டிகளிலும் பங்கேற்று நிச்சயமாக நம்முடைய தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். என்று கூறியுள்ளார்.