துலீப் ட்ராபியில் இடம்பெற்ற சில வீரர்கள் விலகிய நிலையில் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், முன்னதாக ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்படாததற்கு பல கருத்துக்கள் எழுந்தன. இதனையடுத்து அவரும் தற்போது இடம்பெற்றுள்ளார்.
நடப்பு ஆண்டு துலீப் ட்ராபி தொடரின் சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, இந்த தொடரில் இடம்பெற்று இருந்த சில வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றனர். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடக்கும் பயிற்சி முகாமிற்கு அவர்கள் செல்ல வேண்டும் என்பதால், தற்போது துலீப் தொடரிலிருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்றுவீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த கேப்டன் சுப்மன் கில், கே எல் ராகுல், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய ஐந்து வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பதால் தொடரில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக பிராப்தம் சிங், அக்ஷய் வாத்கர், எஸ் கே ரஷீத், சாம்ஸ் முலனி மற்றும் ஆகிப் கான் ஆகிய ஐவரும் அறிவிக்கப்பட்டனர். இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா பி அணியில் இடம் பெற்று இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றதால் அவர்கள் இருவரும் துலீப் ட்ராபியில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதிலாக சுயாஸ் பிரபுதேசாய் மற்றும் ரிங்கு சிங் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்தியா டி அணியில் இடம்பெற்று இருந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக நிஷாந்த் சிந்து அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியின் கேப்டன் ஸ்ரயாஸ் ஐயர், இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பதால், துலீப் தொடரில் தொடர்வார்.
இதற்குமுன்னதாக, ரிங்கு சிங் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியும், துலீப் தொடரில் சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதேபோல், பல முன்னாள் இந்திய வீரர்களும் இது குறித்து கருத்துக்கள் தெரிவித்தனர். அந்தவகையில் இப்போது ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.