பொதுவாக விளையாட்டுத் துறையில் சாதித்த சில வீரர்கள், ஓய்வு பெற்ற பிறகு தங்களுக்கு கிடைத்த அந்த முதல் வாய்ப்பு மற்ற இளம் வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், பயிற்சி மையங்களைத் தொடக்கி பயிற்சி அளித்து வருகின்றனர். அவ்வகையில், 44 வயதான ரோகன் போபண்ணா டென்னிஸ் விளையாடிக் கொண்டே அசாம் மாநிலத்தில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு டென்னிஸ் பயிற்சியை வழங்க உள்ளார். இவரது இந்த முயற்சியை விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ரோகன் போபண்ணா 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். நடப்பாண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். டென்னிஸ் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு, கடந்த 2016 ஆம் ஆண்டில் டென்னிஸ் அகாடமி ஒன்றைத் தொடங்கினார்.
இந்தநிலையில் ரோகன் போபண்ணா, பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இதன் முதல்படியாக அசாம் மாநிலத்தின் மஜுலி தீவு மற்றும் போங்கைகான் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் 9 முதல் 11 வயதுக்கு உள்பட்ட ஆதரவற்ற 25 சிறுவர், சிறுமிகளுக்கு டென்னிஸ் பயிற்சி வழங்க உள்ளார். இதற்காக 300-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் உடற்தகுதி மற்றும் திறமையை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் 25 சிறுவர்களை தேர்வு செய்துள்ளார். பெங்களூருவில் இருக்கும் தனது டென்னிஸ் அகாடமியில், சிறுவர்களுக்கு வருகின்ற மே 22 ஆம் தேதி முதல் டென்னிஸ் பயிற்சியை அளிக்க இருக்கிறார்.
டென்னிஸ் பயிற்சி அளிப்பது குறித்து ரோகன் போபண்ணா கூறுகையில், டென்னிஸ் பயிற்சிக்குப் பலரும் நன்கொடை அளித்துள்ளார். நன்கொடையாளர்களின் விருப்பத்தின்டி முதலில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம். தேர்வு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி மட்டுமல்லாமல், அவர்ளுக்கான கல்வி மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இனி வரும் ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்வு செய்து டென்னிஸ் பயிற்சி அளிப்போம். இப்பயிற்சியில் உலகின் முன்னணி பயிற்சியாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர் எனவும் போபண்ணா தெரிவித்துள்ளார்.