இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங்கில் இறங்காததுக் குறித்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாகப் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தொடரின் கடைசிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்தது. அதேபோல் இந்திய அணி 477 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது. இதன்மூலமாக இந்திய அணி 255 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இப்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கியபோது 117 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஜாக் கிரோலி – பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியிலிருந்து ஃபீல்டிங்கில் ரோஹித் ஷர்மா களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக ஃபீல்டிங் மாற்றங்கள் மற்றும் பவுலிங் மாற்றங்களைப் பந்துவீச்சாளர் பும்ராதான் செய்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா என்றால் துணை கேப்டன் பும்ராதான். பும்ரா துணை கேப்டன் என்பதால் ரோஹித் இல்லாத சமையத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார். ரோஹித் ஷர்மாவிற்கு முதுகில் பிடிப்பு ஏற்பட்டதால் ஃபீல்டிங்கில் களமிறங்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் பும்ராதான் கேப்டனாகச் செயல்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதனையடுத்து அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்துத் தொடர்ந்து ஃபார்மை இழக்காமல் விளையாடி வருகிறார். அதேபோல் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டைக் எடுத்திருக்கிறார். பும்ரா கேப்டன்ஸி செய்வதால் 6 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி மிகவும் பொறுமையாகவே விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணி மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. ஆகையால் வெற்றி விகிதம் இந்திய அணிக்கே அதிகம் உள்ளது.
இந்தநிலையில் ரோஹித் அணியில் இல்லாததால், அவர் மீதமுள்ள ஆட்டம் முழுவதும் அணியிலிருந்து விலகுகிறாரா? அல்லது மீண்டும் அணியில் இணைவாரா? குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் சமீபக்காலமாக ரோஹித் ஷர்மா எந்தக் காயங்களும் ஏற்படாமல் விளையாடி வந்தார். ஆனால் திடீரென்று முதுகுப் பிடிப்பு என்று அணியிலிருந்து விலகியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.