sachin and Aswin 
விளையாட்டு

அஸ்வினை ‘கோடியில் ஒருவன்’ என்று பாராட்டிய சச்சின்!

பாரதி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்த அஸ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் 'கோடியில் ஒருவன்' என்று பாராட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் 2011ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் மொத்தம் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் அஸ்வின். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக கிரோலி மற்றும் டக்கெட் ஆகியோர் ஓப்பனராக களமிறங்கினர். இருவரும் சேர்ந்து 89 ரன்கள் குவித்த நிலையில் அஸ்வின் கிரோலியின் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் தொடர்களில் 500 விக்கெட்டுகள் எடுத்த சாதனையைப் படைத்தார், அஸ்வின். இந்திய வீரர்களில் இரண்டாவது வீரராக 500 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின். முதல் இடத்தில் கும்ப்ளே உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 312 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் இவர்கள் இருவர் மட்டும்தான் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள். அதிலும் வேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது X தளத்தில் அஸ்வினைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அதாவது “கோடியில் ஒருவரான அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் என்ற பெயரின் கடைசி இரண்டு எழுத்துகளையும் ஸ்பின்னர் என்ற பெயரின் கடைசி இரண்டு எழுத்துகளையும் ஒன்றாக சேர்த்தால் வின்னர் என்ற பெயர் வரும். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனை. வாழ்த்துகள் அஸ்வின்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்த அஸ்வின் தமிழ்நாட்டின் பெயரை இந்திய அளவிலும் உலகளவிலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பதியச்செய்துள்ளார்.

எதிரியிடம் மகிழ்ச்சியை காட்டுங்கள்!

சிறகடித்து பறக்கும் பறவையாய் சின்னச் சின்ன சந்தோஷங்கள்..!

வீட்டில் எதிர்பாராத விருந்தினரா? 'லவுக்கி காய் கோஃப்தா' செய்யலாமே!!

மனநிலையை மாற்றி வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

ஈரான் நாட்டுக்கதை - நெசவாளியின் மதிநுட்பம்!

SCROLL FOR NEXT