உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆமதாபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தென்னாப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. ரஸ்ஸி வான்டர் டஸ்ஸன் மற்றும் ஆண்டிலி பிபெஹ்லுக்வயோ இருவரும் கூட்டாக 65 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தனர்.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணியின் வான்டர் டஸ்ஸன் 95 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் எடுத்து கடைசிவரையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆண்டிலே பெஹ்லுக்வயோ 37 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து கூட்டாக 65 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
தென்னாப்பிரிக்கா 9 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை விட 2 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்துவிட்டாலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் 41 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டெம்பா பவுமா எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. அவர் 23 ரன்களில் முஜிபுர் ரஹ்மான் பந்தில் வீழ்ந்தார்.
அய்டன் மார்கரம் உற்சாகமாகத் தொடங்கினாலும் 25 ரன்களில் ரஷீத் பந்துவீச்சில் நவீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கிளாஸன் 10 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் அவுட்டானார்கள். இறுதியில் தென்னாப்பிரிக்கா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 245 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஹ்மானுல்லா, இப்ராகிம் இருவரும் ஆக்ரோஷத்துடன் ஆட்டத்தை தொடங்கினாலும் ஆப்கானிஸ்தான் பின்னடைவை சந்தித்தது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும், அஸ்மதுல்லா ஓமர்சாய் எழுச்சியுடன் ஆடி 97 ரன்கள் எடுத்து கடைசி வரையில் அவுட்டாகாமல் இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரஹ்மதுல்லா 25, ரஹ்மத் ஷா 26, ரஷீத்கான் 14, நூர் அகமது 26 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோயட்ஸீ நான்கு விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், நகிடி 2 விக்கெட்டுகளையும், பெஹ்லுக்வயோ 1 விக்கெட்டையும் எடுத்தனர்.