இலங்கை இந்தியா இடையே நடைபெறும் தொடரில் இன்று இந்திய அணியின் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதனையடுத்து இலங்கை ரசிகர்கள் சிராஜை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கூறி அவருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனால், இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தொடராக இந்த தொடர் உள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பங்குபெறும் தொடர் இது. டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகியவை நடைபெறுகிறது.
இதனையடுத்து இன்று இந்திய அணியின் வீரர்கள் யார்யார் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ளனர் என்பதை பிசிசிஐ முடிவெடுக்கவுள்ளது. ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் உள்ளிட்ட பலரும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு திரும்பவுள்ளனர்.
ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா தொடர்பாக இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இலங்கை ரசிகர்களும் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள் இந்திய அணியிலிருந்து எந்த வீரர்களை வேண்டுமென்றாலும் வரவேற்க தயாராகவுள்ளனர். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர் சிராஜ் மட்டும் வரவே வேண்டாம் என்று கூறுகிறார்கள் அது ஏன் தெரியுமா?
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை ஒரே ஸ்பெல்லில் சுக்குநூறாக உடைத்தவர் சிராஜ். 7 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார். இதனால் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. அதேபோல் உலகக்கோப்பை தொடரிலும் இலங்கை அணியின் டாப் ஆர்டரை சிராஜ் மொத்தமாக வீழ்த்தினார்.
இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் கால்பந்து ஸ்கோரை போல் மாறியது. எப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் விளையாடுவாரோ, வங்கதேச அணிக்கு எதிராக ரோகித் சர்மா அசத்துவாரோ, அப்படி இலங்கை அணிக்கு எதிராக சிராஜ் மிரட்டுவார். ஆகையால், இலங்கை ரசிகர்கள் விராட், ரோகித் வந்தால்கூட பரவாயில்லை, ஆனால், சிராஜ் மட்டும் வரவே வேண்டாம் என்று சொல்லி வருகிறார்கள்.