IPL தொடருக்குப் பின்னர் மிகவும் பிரம்மாண்டமாக டி20 உலககோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதனையடுத்து உலககோப்பை தொடரில் இந்திய அணியில் யார் யார் விளையாடப் போகிறார்கள் என்பது எப்போது அறிவிக்கப்படும் என்றத் தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் மே 26ம் தேதி முடிவடையவுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி முதல் உலககோப்பைத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன என்பதால், போட்டி கடுமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ கவனமாகவும் நேரமெடுத்தும் தேர்வு செய்கிறது. அதுவும் ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்தவுடன் உலகபோட்டியில் விளையாடுவது அந்த வீரர்களுக்கு சாத்தியமா என்பதிலும் கவனம் செலுத்தி அதர்கேற்றவாரு திட்டம் செய்து வருகிறது பிசிசிஐ.
உலககோப்பைத் தொடரின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும் சூப்பர் 8 , நாக் அவுட் ஆகிய போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பிசிசிஐ சார்பாக பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் சில நிர்வாகிகளை நியமித்திருந்தார். அவர்கள் அந்த நாடுகளில் விளையாடப்போகும் மைதானங்கள் பற்றி பிட்ச் ரிப்போர்ட் எடுத்து பிசிசிஐயிடம் சமர்பித்தனர். அதில் அனைத்து மைதானங்களும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதில் விராட் கோலி ஸ்லோ விக்கெட்டுகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால் அவர் கட்டாயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரோஹித் ஷர்மா, ஹார்திக் பாண்டியா, பும்ரா, சூர்ய குமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் கட்டாயம் விளையாடப்போவதாகத் தகவல் வந்துள்ளது.
இன்னும் 4 முதல் 5 வீரர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஐபிஎல் போட்டியில் யார் யார் ஸ்லோ விக்கெட் மைதானங்களில் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு பிசிசிஐ தேர்வுக் குழு ஆணையம் தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 28ம் தேதி அணி வீரர்கள் பட்டியல் தயாராகிவிடும். அடுத்த நாள் பிசிசிஐ நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். இதனையடுத்து ஏப்ரல் 30ம் தேதி உலககோப்பை தொடரில் விளையாடப்போகும் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மே 21ம் தேதியிலிருந்து ப்ளே ஆஃப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. எனினும், உலககோப்பையில் விளையாடப்போகும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இது ஐபிஎல் அணிகளுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.