தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் நீண்டக் காலத்திற்கு பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மூன்றாவது டி20 போட்டியில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும் குவித்தனர்.
அடுத்து ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்கம் முதலே ரன் குவிக்கத் திணறியது. இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான கலீல் அகமத் மற்றும் ஆவேஷ் கான் பவர் பிளே ஓவர்களிலேயே அந்த அணியின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன்பின் மிடில் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் அந்த அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதனால், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதுவரை சுந்தர் 68 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், ஆட்டநாயகன் விருதை வென்றது இதுவே முதல்முறையாகும். 2017 டிசம்பர் மாதம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 7 ஆண்டுகளாக அவர் 4 டெஸ்ட் போட்டிகள், 19 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 45 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
இதுகுறித்து பேட்டி முடிந்து சுந்தர் பேசுகையில், "நான் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் சிறப்பாக உணர்கிறேன். இது மிகவும் நல்ல உணர்வாக இருக்கிறது." என்றார்.
சர்வதேச டி20 தொடர்களிலிருந்து ரவிந்திர ஜடேஜா ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு இணையான ஒரு சுழற் பந்துவீச்சாளர் கிடைத்துள்ளது வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.