விளையாட்டு

‘தன்னலமற்ற தலைவன் தோனி’ கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

கல்கி டெஸ்க்

பிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகளின் 16வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண உள்ளது. தொடக்கம் முதல் இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் எம்.எஸ்.தோனி. இந்த சீசனிலும் அவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கலந்துகொண்டு விளையாடி வருகிறார். நாற்பது வயதைக் கடந்து விட்ட எம்.எஸ்.தோனி, இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளோடு இதிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். அதனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதோடு, தம்முடைய கிரிக்கெட் பயணத்திலிருந்து இனிதே விடைபெறுவார் தோனி என்பது கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே அதற்கான தீவிரப் பயிற்சியில் இறங்கி உள்ளார் எம்.எஸ்.தோனி. அது சம்பந்தமான சில வீடியோக்களும் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ‘ஜியோ சினிமா’ நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ‘ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் என்றால் அது எம்.எஸ்.தோனிதான் என்பது எனது கருத்து. கேப்டன் பதவிக்காக பலரும் ஆசைப்படும் நிலையில், தானே முன்வந்து அந்தப் பதவியை விட்டுக்கொடுத்த பெருமை தோனியையே சாரும். அப்படி கேப்டன் பதவியை விட்டுக்கொடுப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் எவ்வளவு தன்னலமற்ற வீரர் என்பதையே இது காட்டுகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

இதுதவிர, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ராபின் உத்தப்பா உள்ளிட்ட பலரும்கூட, ‘தன்னலமற்ற வீரர்’ என எம்.எஸ்.தோனியையே தங்களது விருப்பப் பெயராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல், ‘கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஸ்டைலான வீரர் யார்’ என்ற கேள்விக்கு, கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா என்று அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT