மேட்ச்சுக்கு மேட்ச் வாதங்கள், விவாதங்கள் அதிகரித்து வருவது IPL ஆட்டங்களுக்குப் பொருந்தும். அதிரடியை, அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மேட்ச்சுகளில், ஓர் அணி வெற்றி பெறுவது ரசிகர்களுக்கு உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிப்பதையும், வெற்றி பெறாத அணியின் ரசிகர்கள் வருத்தம், கோபம் கொள்வதும், IPL திருவிழாவின் பகுதியாகிவிட்டது.
ஆர்வம் மேல் ஓங்க நடைபெறும் மேட்ச்சுக்கள் கூடவே ஆச்சர்யம், திகைப்பு, ஷாக், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வெறுப்பு, விருப்பு என்று மாற்றி மாற்றி ரசிகர்களுக்குக் காட்சிகள் அளிப்பது IPL மேட்ச்சுக்களின் தனித் தன்மை.
பல சிறந்த, திறமையான வீரர்கள் இருந்தும் ஏன் சில அணிகளால் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க முடியவில்லை. அதே சமயம் ஒரு அணி கூட, விளையாடும் எல்லா மேட்ச்சுகளிலும் தொடர்ந்து வெற்றியோ அல்லது தோல்வியோ பதிவு செய்ய முடியவில்லை. குறிப்பிட்ட ஒரு பேட்ஸ்மன் அல்லது பவுலர், எல்லா ஆட்டங்களிலும் பிரகாசிப்பதும் இல்லை. இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சில.
வெற்றி பெற்ற / பெறும் அணிகளில், பெரும்பாலான முக்கிய தருணங்களில் அமைதி காத்தும், பதற்றப்படாமலும், அடக்கி வாசித்தும் இருப்பார்கள்
வெற்றியை நழுவவிட்ட அணியில், சில வீரர்களாவது ஆக்ரோஷமாக விளையாட போய் பாலன்ஸ் இழந்து, அதி வேகமாகவோ, தேவைக்கு அதிகமாக மிக ஸ்லோவாகவோ செயல்பட்டு இருப்பார்கள்.
பேட்டிங் ஆட வந்ததும் வராததுமாக, அதிரடியாக ஆடி சொதப்பும் வீரர்கள், அணி தோல்வி அடைய உதவுகிறார்கள்.
எந்த அணியின் பவுலர்கள் அதிக டாட் பந்துக்கள் வீசுகிறார்களோ, குறைவான வைட், நோ பால்கள் போடுகிறார்களோ, அவர்கள் உண்மையாக அணியின் வெற்றிக்குப் பெரிய சகாயம் செய்கிறார்கள்.
இந்த மாதிரி பவுலர்கள் இவ்வாறு செயல்படும்பொழுது, எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில், பெரும்பாலும் எதிரணி வீரர்கள், டென்ஷனில் விளையாடப் போய் தவறிழைத்து, விக்கெட்டுக்கள் இழப்பதோ அல்லது குறிப்பாக குறைவான ரன்கள் எடுப்பதோ அடிக்கடி நடைபெறுவதைக் கண்கூடாகக் காணலாம், தோல்வியைத் தழுவும் அணிகளின் சார்பாக.
எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும் பவுலிங் செய்யும் கேப்டன், குறிப்பிட்ட பவலர்களை பவர் ப்ளே மற்றும் கடைசி நான்கு ஓவர்கள் தருணங்களில் பந்து போட செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப தேவையான கணக்குகளைப் போட்டு பவுலர்களுக்கு பவுலிங் மாற்றம் கொடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலை உருவாக்க உதவும். பவுலிங் அணிக்கு வெற்றி பெற உதவும்.
அதே சமயம் பேட்டிங் விளையாடும் வீரர்கள் எதிரே விழும் எல்லா பந்துக்களையும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்க விட வேண்டும் என்பதை தள்ளி வைத்து விட்டு, வரும் பந்தின் தன்மைக்கு ஏற்பவும், பீல்டிங் செட் அப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஆட வேண்டியது அத்தியாவசமாகின்றது.
பேட்டிங், பவுலிங் மட்டும் மேட்சின் முடிவை, முடிவு செய்வது இல்லை. பீல்டிங், குறிப்பாக கேட்ச்சுக்கள் பிடிப்பது, நழுவ விடுவதும்தான். IPL போன்ற ஆட்டங்களில் அவற்றின் மதிப்பு கைமேல் பலன் கொடுக்கும். பல உதாரணங்கள் இருந்தாலும் இரண்டு மேட்ச்சுக்களின் குறிப்பிட்ட நிகழ்வுகள்.
CSK vs KKR ஆட்டம் (08.04.24)
அனுபவ வீரர் ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே, ரகுவன்ஷி அவசர அவசரமாக ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் அடிக்க சென்று அவுட் ஆனார்.
அதே மேட்சில் CSK வீரர் மிட்செல், பதற்றப்படாமல் எப்படி ரிவர்ஸ் ஸ்வீப் தரையோடு ஆடி ரன்கள் குவித்தும், விக்கெட்டை தக்க வைக்கலாம் என்று பாடமே எடுத்தார்.
KKR அணியின் மற்றும் ஒரு வீரர் வெங்கடேஷ் ஐயர் (அனுபவம் மிக்கவர்) ஆடிய 8 பந்துக்களையும் லெக் சைடில் தூக்கி அடிக்க மட்டும் முயற்சி செய்துகொண்டு இருந்தார். அவுட் ஆனார் அவரது அவசர ஆட்டத்தால். எடுத்த ரன்கள் 3.
இந்த இரு நிகழ்வுகளும், KKR அணி அன்று தோல்வி தழுவ உதவியது என்றால் மிகையாகாது.
MI vs CSK ஆட்டம் (14.04.24)
அனுபவம் மிக்க ஆட்டக்காரர்கள் மூவர் சம்பந்தப்பட்டது.
கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, தோனிக்கு அந்த ஓவர் போட்டதைத் தவிர்த்து இருக்கலாம். அல்லது முதல் சிக்ஸ் பறந்து சென்றதை பார்த்ததும், சுதாரித்ததுக்கொண்டு இருக்க வேண்டும்.
அனுபவம் கை கொடுக்கவில்லை. வெல்ல வேண்டும் என்ற மித மிஞ்சிய ஆசை, தன்னால் முடியும் என்ற அதிக நம்பிக்கை (over confidence) அவசரம் மற்றும் பதற்றம் எல்லாமுமாக சேர, மேலும் இரண்டு சாதாரண பந்துக்களை பாண்டியா வீச, தோனி அவற்றை சிக்ஸர்களாக விளாசி சரித்திரம் படைத்தார்.
அடுத்தவர் ரோஹித் சர்மா. கை மேல் விழுந்த கேட்சை நழுவவிட்டார் (IPL மேட்ச் லெவலுக்கு இந்த வகை கேட்ச் எல்லாம் பிடிக்க வேண்டியவை)
MI அணி தோல்வி பெற இந்த நிகழ்வுகளும் காரணம்.
இந்த இரண்டு நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்திருந்தால், இந்த மேட்சின் போக்கும், ரிசல்ட்டும் மாறியிருக்கும்.
அதிரடி ஆட்டம் சரியான தருணத்தில் வெளிப் படுத்தப்பட்டது.
நான்கு பந்துக்களில் மூன்று சிக்ஸர்கள், தோனி எடுத்த ரன்கள் 20*.
CSK வெற்றியின் வித்தியாச ரன்கள் 20