பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், தற்போது புதிய செயலாளராக ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன் தலைவர் பதவிக்கு ஜெய் ஷா வருவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு, இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகவும் துணை நின்றவர்கள்தான் வருவார்கள். கடந்த 20 ஆண்டுகளாகவே அப்படித்தான் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவே பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்து அந்த பதவிக்கு பாஜகாவை சேர்ந்த மற்றொரு நபர்தான் வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி அந்த பதவிக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இதனால், அவருக்கு பிசிசிஐ பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல், பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா-வுக்கும் பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிசிசிஐயில் மொத்தம் மூன்று பதவிகள் மிகவும் முக்கியமானவை. தலைவர், செயலாளர், பொருளாளர். தலைவர் பதவியில், முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்து வருகிறார். இவருக்கு இன்னும் ஒராண்டு காலம் பதவிக்காலம் உள்ளது. செயலாளர் பதவியிலிருந்து ஜெய் ஷா விலகியவுடன், தலைவர் பதவியில் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக 36 வயதாகும் ஜெய் ஷா நியமிக்கப்பட்டால் இளம் வயதில் தலைவர் பதவியை பிடித்து சாதனை செய்வார். ஐசிசி தலைவராக இருந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் பெறுவார். இதற்கு முன்னர் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். ஸ்ரீனிவாசன், ஷஷான்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக இருந்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் தலைவர் மற்றும் செயலாளர் யார் என்ற செய்திகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.