இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவர் ஒய்வு பெற்று விடுவார் என்பதால், அவரிடத்தை நிரப்ப அடுத்த தலைமுறை ஆஃப் ஸ்பின்னரைத் தேடி வருகிறது பிசிசிஐ. அஸ்வினின் இடத்தை நிரப்பும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தவர் அஸ்வின் என்றால் அது மிகையாகாது. ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் திணறியுள்ளனர்.
இந்திய அணிக்காக அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இதுதவிர 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஸ்வின் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
தற்போது 38 வயதாகும் அஸ்வின், இன்னும் ஒருசில ஆண்டுகளே விளையாடுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், அஸ்வினின் இடத்தை நிரப்ப சரியான வீரரை பிசிசிஐ இப்போதிருந்தே தேடிக் கொண்டிருக்கிறது. போட்டி நிறைந்த இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வினை ஈடுகட்டும் அளவிற்கு சரியான வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமல்லவா! ஏனெனில் பந்துவீச்சு மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங்கிலும் ரன் குவிக்கும் திறமை படைத்தவர் அஸ்வின்.
சமீபத்தில் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக அஸ்வின் கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகள் தவிர்த்து ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார் அஸ்வின்.
உலகத்தரம் வாய்ந்த வீரராக புகழப்பட்ட அஸ்வினின் இடத்தை ஒரு தமிழக வீரர் நிரப்பினால் எப்படி இருக்கும்! ஆம், இந்த ரேஸில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரும் உள்ளார். இந்தியா ஏ அணியில் வாசிங்டன் சுந்தர், புல்கிட் நரங் மற்றும் சரன்ச்க் ஜெய்ன் ஆகிய 3 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது பிசிசிஐ. இதில் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது திறமையை நிரூபித்து வருகிறார் வாசிங்டன் சுந்தர். இதனால் இவருக்குத் தான் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கும் கணித்துள்ளார்.
முன்னணி வீரர்களின் ஓய்வால் வாசிங்டன் சுந்தருக்கு டி20 போட்டிகளில் அவ்வப்போது விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதுமட்டுமின்றி ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதமும் அடித்துள்ளார். இருப்பினும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது தான், அவர் இடத்தை நிரப்புவது யார் என்பது தெரிய வரும்.