MS Dhoni's Next Plan 
விளையாட்டு

மீண்டும் வருவாரா தோனி?

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஐபிஎல் போட்டியில் சென்னையின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனி காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற லண்டன் செல்ல இருக்கிறார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்ற பெயரால் அழைக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளையும், சென்னை அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுத் தந்தவர் தோனி. இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டியில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடுகிறார். தோனி களத்தில் நுழைந்தால் ரசிகர்களின் ஆரவாரம் அடங்கவே பல நிமிடங்கள் ஆகும்.

கடந்த மே 18 ஆம் தேதி நடந்த போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடியது சென்னை அணி. இப்போட்டியில் துரதிருஷ்டவசமாக சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும், இப்போட்டியில் தோனி அடித்த ஒரு சிக்ஸர் 110 மீட்டருக்குச் சென்றது. இதனை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, தோனி சோகமாக காணப்பட்டது, ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு நிச்சயமாக தோனி விளையாடுவார் என்ற திருப்தியோடு ரசிகர்கள் அங்கிருந்து சென்றனர். ஏனெனில், தன்னுடைய கடைசி ஆட்டம் சென்னையில் தான் இருக்கும் என தோனி ஏற்கனவே கூறியிருக்கிறார்.

2024 ஐபிஎல் போட்டியில் சென்னையின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியின் அடுத்த திட்டம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. தோனி வெகு விரைவிலேயே லண்டன் சென்று, இடது காலில் ஏற்பட்டுள்ள தசை நார் வலிக்கு சிகிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் தோனி. இருப்பினும் காயம் முழுமையாக குணமடையாததால், கால் தசை நார் கிழிந்து வலியால் அவதிப்பட்டார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியதால் அணி பின்னடைவைச் சந்தித்தது.

இதன் காரணமாக தனது வலியையும் பொருட்படுத்தாமல் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடினார் தோனி. ஆனால் இவர் களத்தில் அதிக நேரம் பேட்டிங் செய்யவும், ரன் எடுத்து ஓடவும் அதிக சிரமங்களைச் சந்தித்தார். ஆகையால் தான் அனைத்துப் போட்டிகளிலும் கடைசி கட்டத்தில் களம் கண்டு 'பினிஷிங்' பணியை சிறப்பாக செய்து வந்தார். தோனி, தான் விளையாடிய 14 போட்டிகளில் 53.66 சராசரி மற்றும் 220.54 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 161 ரன்களை எடுத்தார்.

தோல்விக்குப் பிறகு உடனே பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சொந்த ஊரான ராஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். தற்போதைக்கு லண்டன் சென்று, தனது இடது கால் தசை நார் கிழிசலுக்குத் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளார். இந்தக் காயம் குணமடைய 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம். காயத்தின் தன்மையைப் பொறுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT