Vinesh Phogat  
விளையாட்டு

வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அமெரிக்க வீரர்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கடினமான சூழலில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத்திற்கு அமெரிக்க மல்யுத்த வீரர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. ஒரு வீராங்கனைக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தும், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது? இப்படி ஒரு பேரதிர்ச்சியை எதிர்கொண்டவர் தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வினேஷ் போகத். கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லாத நிலையில், இந்த முறை நிச்சயமாக தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்ற நிலையில், 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலகின் டாப் வீராங்கனைகளை எதிர்த்து விளையாடிய வினேஷ் போகத், அனைவரையும் தனது திறமையால் வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்றப் பெயரைப் பெற்றார். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இறுதிப்போட்டிக்கு முன்பாக எடை சரிபார்த்தலின் போது போகத் 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி ஒலிம்பிக் சங்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருந்த சமயத்தில், இப்படி ஒரு பேரதிர்ச்சி இந்தியர்களின் பதக்க கனவை தட்டிப் பறித்து விட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த வினேஷ் போகத் நிலை தடுமாறினார். அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதி வெற்றி பெற்ற பிறகு, உடல் எடையைக் குறைக்க சாப்பிடாமல் இருந்தும், தொடர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் வந்த போகத், நீர்ச்சத்துக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்‌ போகத். இதனால் தற்போது இந்தப் போட்டிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவாரா அல்லது வெள்ளிப்பதக்கத்தைப் பெறுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ், வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கத்தை அளிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போல் இந்தியா முழுக்க பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

எந்த ஒரு வீரருக்கும் வரக்கூடாத ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளார் வினேஷ் போகத். நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. அதற்குள் தனது மல்யுத்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் போகத்.

தனது ஓய்வு குறித்து கூறிய வினேஷ் போகத், “மல்யுத்தம் என்னை வென்று விட்டது; நான் தோற்று விட்டேன். இதற்கு மேல் போராட என்னுள் சக்தியில்லை; 2001 முதல் 2024 வரையிலான எனது மல்யுத்த வாழ்க்கைக்கு குட் பை” எனத் தெரிவித்துகள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக மல்யுத்தம் விளையாடி, பல பதக்கங்களை வென்ற ஒரு வீராங்கனையின் ஓய்வு முடிவு இப்படியான ஒரு சூழலில் எடுக்கப்பட்டு இருப்பது கவலையளிக்கிறது. 

வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட நடுவர் நீதிமன்றம், இன்று இருதரப்பு வாதங்களையும் விசாரித்தது. இதில் ஒலிம்பிக் கமிட்டி தாம் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கிறது. ஆனால், இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் அல்லது எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால், வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள எனக்கு உரிமை அளிக்க வேண்டும் என போகத் கோரிக்கை வைத்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த மனுவிற்கான இடைக்காலத் தீர்ப்பை நாளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நடுவர் நீதிமன்றம் மேல்முறையீட்டை எடுத்துக் கொண்டதையே பெரிய வெற்றியாக பார்க்கிறார் போகத். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா அல்லது தகுதி நீக்கம் தொடருமா என்பதை நாம் தெரிந்து கொள்ள நாளை வரைக் காத்திருக்க வேண்டும். வினேஷ் போகத்திற்கு ஆதரவாக நாமும் உடனிருப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT