Indian team  
விளையாட்டு

வளர்ந்து வரும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் பலரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வருகின்றனர்‌. அதிரடிக்குப் பெயர் போன டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் ஓய்வு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பெனும் கதவைத் திறந்தது. தற்போது இந்திய டி20 அணியில் இளம் வீரர்களே அதிகமாக நிரம்பியுள்ளனர். இருப்பினும் 15 வீரர்களில் தேர்வாகும் சிலருக்கு ஆடும் 11 பேரில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால், சில வீரர்கள் களத்தில் இறங்கி விளையாட முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்.

சமீப காலமாக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக இறங்கி விளையாடி வருகிறார். இவரும் கூட இந்திய அணிக்குத் தேர்வாகி பல நேரங்களில் ஆடும் வாய்ப்பைப் பெறாமல் இருந்தார். இவரைப் போலவே யாஷ் தயாள், ரமன்தீப் சிங் மற்றும் வைஷாக் விஜய்குமார் போன்ற இளம் வீரர்களுக்கும் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரின் ஒரு லீக் போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். இருப்பினும் மனம் தளராமல் தற்போது இந்திய அணிக்கு வலிமையாகத் திரும்பி வந்திருக்கிறார். ரமன்தீப் சிங் சமீபத்தில் விளையாடிய பல போட்டிகளில் தனது திறமையான பேட்டிங்கை நிரூபித்துள்ளார். மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்யும் இவர், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடக் கூடியவர். மேலும், தேவைப்படும் நேரங்களில் பந்து வீசவும் செய்வார். வைஷாக் விஜய்குமார் கர்நாடகா அணிக்காக பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் இவருக்கு, போதிய வாய்ப்புகள் அளிக்கப்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த மூன்று இளம் வீரர்களும் தேர்வாகி உள்ளனர். ஆனால் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வீரர் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

Young Players

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் தான் யாஷ் தயாள், ரமன்தீப் சிங் மற்றும் வைஷாக் விஜய்குமார் ஆகியோர் இந்திய அணிக்குத் தேர்வாகி உள்ளனர். இவர்கள் மூவருக்கும் களத்தில் இறங்க வாய்ப்பு கொடுத்தால், நிச்சயமாக சாதிப்பார்கள்” என அனில் கும்ப்ளே கூறினார்.

உள்ளூர் போட்டிகளில் பல இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் யாரைத் தேர்வு செய்வது என்பதே தேர்வுக்குழுவிற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. ஒருவழியாக 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தாலும், அதில் ஆடும் 11 பேர் யார் என்பதைத் தீர்மானிப்பது கேப்டனுக்குத் தான் சவால் நிறைந்ததாக இருக்கும்.

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

உங்கள் கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? அதற்கான பலன்கள் என்னவென்று தெரியுமா?

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் 5 எளிய வீட்டு வைத்தியங்கள்!

எந்தெந்த பழங்களின் தோலை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தெரியுமா?

SCROLL FOR NEXT