கோடைக்காலம் என்பது மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டமாகும். இது தாங்க முடியாத வெப்ப கோடைக்கால நோய்களுக்கு வழி வைக்கிறது. இதனை சமாளிக்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
* கடும் வெயிலினால் தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், நீர் இழப்பு, கொசுவினால் பரவும் நோய்கள், அம்மை நோய்கள், வெப்ப சோர்வு, ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
* பலரது வேலை முறை வெயிலில் அலைந்து திரிவதாக இருக்கலாம். வெயிலில் நின்று வேலை செய்வது அல்லது வேலைக்குச் செல்வதற்காக நீண்ட நேரம் வெயிலில் பயணம் செய்வது என இருக்கலாம். இது அதிகம் வெப்பம் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். இம்மாதிரியான சமயங்களில் தலைக்குத் தொப்பி, குடை போன்றவை ஓரளவு நம் உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
* சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கோடை காலத்தில் வேகமாகப் பரவுவதால் சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவ வழிவகுக்கும். இதனைத் தவிர்க்க பதநீர், பானகம், நுங்கு, கேப்பை கூழில் தயிர் விட்டு உப்பு சேர்த்து சாப்பிட உடலின் வெப்பம் உடனடியாகத் தணியும்.
* வெப்பமான காலநிலையில் வேலை செய்பவர்கள் முடிந்த அளவு நிறைய நீராகாரம் எடுத்துக்கொள்வது நல்லது. அத்துடன் காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, நீர்மோர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூஸ், இளநீர், சாத்துக்குடி, தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள உடல் டி ஹைட்ரேட் ஆகாமல் இருக்கும்.
* சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. அத்துடன் அதிகம் சர்க்கரை சேர்த்த பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளாமல் பழங்களாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
* அதிக வெப்பம் காரணமாக நாவறட்சி, தொண்டை வறண்டு போகுதல், அதிக வியர்வை, வேர்க்குரு போன்றவை ஏற்படும். இதற்கு பருத்தி ஆடைகளை அணிவதுடன், கூலிங் கிளாஸ் அணிந்து வெளியில் செல்லலாம். அவ்வப்பொழுது கைக்குட்டையை ஈரமாக்கிக் கொண்டு முகம், கழுத்து, கைப்பகுதிகளை துடைத்து விட, வெப்பத்தின் தாக்கம் குறையும்.
* தயிர் சாதம், கம்பங்கூழ், கீரை வகைகள், நீர்ச்சத்து மிகுந்த பூசணிக்காய், வெள்ளரிக்காய், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், வெங்காய தயிர் பச்சடி, சாலட் வகைகள், சூப்புகள் என சாப்பிட கோடை வெயிலிலும் நம் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை:
* எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்கள், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்தல் நல்லது. அதிக சர்க்கரை சேர்த்த இனிப்பு பண்டங்கள், பானங்களை தவிர்ப்பதும் சூடான, காரசாரமான, மசாலாக்கள் அதிகம் நிறைந்த உணவு வகைகளை குறைத்துக் கொள்வதும் நல்லது.
* உடல் சூடு அதிகரிக்கும்போது அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண்கள் சிவந்து போகுதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், நீர்மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
* குறிப்பாக, வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வெப்பத்தால் ஏற்படும் உடல் அரிப்பு, சருமம் சிவந்து தடித்து போகுதல் போன்றவை ஏற்படாது.
அருகம்புல் சாறு, சிட்ரஸ் வகை பழங்களின் சாறுகள் நம் உடல் வெப்பத்தால் இழந்த நீரை சமன் செய்து நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.