நம் உடல் நல்ல ஆரோக்கியம் பெறுவது, நாம் உண்ணும் உணவு சிறந்த முறையில் ஜீரணமாகி சத்துக்கள் முழுமையாக உடலுக்குள் உறிஞ்சப்படும் வரையிலான மிகவும் முக்கியமானதொரு செயல்பாட்டில் அடங்கியுள்ளது. இதற்கு நன்கு உதவி புரிந்து சிறந்த முறையில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நாம் தவறாமல் உட்கொள்ள வேண்டிய சரியான பத்து உணவுகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* பப்பாளி பழத்திலுள்ள பாபெய்ன் (Papain) என்ற என்சைம், புரோட்டீன் சத்துக்களை உடைப்பதற்கு உதவி புரிகிறது. இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் நல்ல முறையில் நடைபெறவும், சிக்கலின்றி மலம் வெளியேறவும் உறுதுணையாய் நின்று செயல்படுகிறது.
* பெருஞ்சீரகமானது இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இருக்கும் தசைகளை தளர்வுறச் செய்வதுடன் அங்குள்ள வீக்கங்களையும் நீக்குகிறது. இதன் மூலம் அஜீரணம் மற்றும் ஜீரணக் கோளாறு ஏதுமின்றி சிறந்த முறையில் செரிமானம் நடைபெற உதவுகிறது.
* பெப்பர்மின்ட், குடல் இயக்கத்தில் எரிச்சலுடன் கூடிய அஜீரணக் கோளாறு உண்டாகும் அறிகுறியை (IBS - indigestion and irritable bowl syndrome) நீக்குகிறது. சௌகரியமான ஜீரணத்துக்கு பெப்பர்மின்ட் டீ அல்லது ஆயில் எடுத்துக்கொள்வது நலம் தரும்.
* நிறைந்த புரோபயோடிக் சத்துக்கள் கொண்ட யோகர்ட், ஜீரண மண்டலத்தில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தி, ஜீரணத்தை மேம்படுத்தவும், ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்படவும் உதவுகிறது.
* ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட இஞ்சி, வீக்கம், குமட்டல் போன்ற அசௌகரியங்களைக் களைந்து சிறப்பான செரிமானத்தைத் தூண்ட வல்லது.
* சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது ஒருவித ஜெல் போன்ற பொருளை உண்டுபண்ணி, உணவுகள் சுலபமான முறையில் ஜீரண மண்டலப் பாதையைக் கடந்து செல்ல உதவுகிறது.
* பைனாப்பிளில் உள்ள புரொமெலைன் என்ற என்சைம் புரோட்டீன்களை உடைத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதோடு, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படவும் துணை புரிகிறது.
* ஓட்ஸ், குயினோவா, பிரவுன் ரைஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்குகின்றன.
* அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த அவகோடா பழத்தில் மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பும் கரையக்கூடிய நார்ச் சத்தும் உள்ளன. இவ்விரண்டும் சேர்ந்த கூட்டணி சிக்கலில்லா செரிமானத்துக்கு உத்தரவாதம் அளிப்பவை.
* சார்க்ராட் (Sauerkraut), கிம்ச்சி, கெஃபிர் போன்ற நொதிக்கச் செய்த உணவுகளில் புரோபயோடிக் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை ஜீரண மண்டலத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவவும், நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் செய்கின்றன.
இவ்வாறெல்லாம் அதிகப்படியான நன்மைகள் தரும் உணவுகளை அனைவரும் அடிக்கடி உட்கொண்டு மேன்மையான ஆரோக்கியம் பெறுவோம்.