கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பலருக்கும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சுருக் சுருக் என்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு சிறுநீர் தொற்று ஒரு காரணமாகும். சிறுநீர் பாதையில் வளர்ச்சி அடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனைச் சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்பட்டு வலி மற்றும் எரிச்சல் உண்டாகும். இது தவிர, உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதும், சிறுநீரகக் கற்கள் இருந்தாலும், கல்லீரலில் பிரச்னை இருந்தாலும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி போன்றவை இருக்கும்.
வெயில் காலத்தில் பொதுவாக ஏற்படும் இந்த நீர் சுருக்குக்கு போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். அத்துடன் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை சர்க்கரையை தவிர்த்து தேன் கலந்து ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய அளவில் நீர் மோர் பருகுவது நல்லது. இது தாகம் தணிப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மேலும், இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மல்லித்தூளை கலந்து ஊற விடவும். காலையில் அதனை வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக, வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
சிறுநீர் தொற்றின் தாக்கம் குறைய வாழைத்தண்டு சாறை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். இளநீர், எலுமிச்சை சாறு போன்றவை எடுத்துக்கொள்வது தொற்றுநோய் கிருமிகளை வெளியேற்ற உதவும்.
சித்த மருத்துவத்தில் ஓர் இதழ் தாமரை, நன்னாரி, நீர்முள்ளி குடிநீர் வகைகளில் ஏதாவது ஒன்றை அருந்துவது நீர் கடுப்பு குணமாக நல்ல பலன் அளிக்கும்.
பருகும் நீரின் அளவு குறையும்போது சிறுநீரின் நிறமும் மாறும். வெளிர் மஞ்சளாகவோ, அடர் நிறத்திலோ சிறுநீர் கழியும். இதற்கு நிறைய நீர் மற்றும் நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீராகாரம் என்பது முந்தைய இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை அந்த நீரை வடித்து சிறிது உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 2, நல்லெண்ணெய் கலந்து பருக உடல் குளிர்ச்சி அடையும்.
அதிக உடல் சூட்டினால் ஏற்படும் இந்த நீர் கடுப்பு குணமாக அரை ஸ்பூன் விளக்கெண்ணையை எடுத்து தொப்புள் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் தடவி விட சரியாகும். கை வைத்தியமாக சிறிது சுண்ணாம்பை எடுத்து கால் கட்டை விரல்கள் இரண்டிலும் தடவி விட எரிச்சலுடன் சிறுநீர் கழிவது குணமாகும்.