மலச்சிக்கல் என்பது நவீன வாழ்க்கை முறையில் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினையாக மாறிவிட்டது. தவறான உணவுப் பழக்கங்கள், குறைந்த நார்ச்சத்து உணவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். மலச்சிக்கல் தீவிரமடையும்போது, அது நம்முடைய தினசரி வாழ்க்கையை பாதித்து, பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளுடன் இணைந்து யோகாசனங்கள் செய்வது மலச்சிக்கலை சரி செய்ய ஒரு இயற்கையான வழியாகும்.
இந்தப் பதிவில் மலச்சிக்கலை போக்கும் சில முக்கியமான யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம்.
பவன்முக்தாசனம்: இந்த ஆசனம் மலச்சிக்கலுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் ஒரு யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் வயிற்றுப் பகுதியில் உள்ள வாயுவை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு தரையில் படுத்துக்கொண்டு, முழங்கால்களை மார்பில் வைத்துக் கொள்ளவும். பின்னர், கைகளால் முழங்கால்களை இறுக்கமாகப் பிடித்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைக்கவும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து பின்னர் மெதுவாக விடுவிக்கவும்.
மலாசனா: மலாசனா என்பது இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை நீட்டி செரிமானத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த ஆசனம் ஆகும். இதை செய்வதற்கு கால்களை இணைத்து நின்று, முழங்கால்களை வளைத்து உட்கார்ந்த நிலைக்கு வரவும். பின்னர், கால்களை இடுப்புக்கு அப்பால் விரித்து கைகளை முன் பக்கமாக இணைத்து மணிக்கட்டுகளைத் தொடவும்.
தனுராசனம்: தனுராசனம் அல்லது வில் போஸ் என்பது வயிற்றுப் பகுதியை நீட்டி செரிமானத்தை மேம்படுத்தும் ஒரு ஆசனம். இதைச் செய்வதற்கு தரையில் குப்புற படுத்து, முழங்கால்களை வளைத்து கணுக்கால்களைப் பிடித்துக்கொள்ளவும். பின்னர், தலையை மேலே உயர்த்தி கால்களை மேலே இழுத்து வில் போன்ற வடிவத்தை ஏற்படுத்தவும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்த பின்னர் மெதுவாக விடுவிக்கவும்.
சேது பந்தாசனம்: சேது பந்தாசனம் மலச்சிக்கலை போக்குவதற்கு உதவும் ஒரு சிறந்த ஆசனம். இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் படுத்து, முழங்கால்களை வளைத்து கால்களை இடுப்புப் பகுதியில் வைக்கவும். பின்னர், இடுப்பை உயர்த்தி ஒரு பாலம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தவும். அடுத்ததாக கைகளை தரையில் வைத்து உடலை தாங்கிப் பிடிக்கவும்.
இந்த நான்கு யோகாசனங்களை செய்வது மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக சரி செய்ய உதவும். எனவே, உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், குறிப்பிட்ட நான்கு யோகாசனங்களை முயற்சித்து செரிமானத்தை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த யோகாசனங்களை ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் பேரில் செய்வது பாதுகாப்பானது.