கோடைக் காலத்தில் நீண்ட நேரம் நின்று அல்லது உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும். பருமனாக உள்ளவர்களுக்கும் கால்களிலும் கணுக்கால்களிலும் வீக்கம் ஏற்படும். இதை எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்யலாம்.
வீக்கத்தை குறைக்க உதவும் வழிமுறைகள்:
1. சாக்ஸ் அணிதல்: கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்வதன் மூலம் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள திசுக்கள் அழுத்தப்படுகின்றன. இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் வடிகால் அதிகரிக்கும். இதனால் வீக்கம் குறையும்.
2. நடைப்பயிற்சி: நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவையும் பயனுள்ள பயிற்சியாக இருக்கும். இரத்த ஓட்டத்தைத் தூண்டி வீக்கத்தைக் குறைக்கும்.
3. மசாஜ்: வீக்கம் உள்ள பகுதிகளில் ஒரு ஐஸ் கட்டியை ஒரு துண்டுடன் போர்த்தி மசாஜ் செய்யலாம். இதனால் வீக்கமும் வலியும் குறையும்.
4. கால்களை உயர்த்தி வைத்தல்: உட்காரும்போது அல்லது படுக்கும்போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படிச் செய்யும்போது கால்களின் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்து கொண்டும் இருக்கலாம்.
5. கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊற வைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.
வீக்கத்தை குறைக்கும் உணவுகள்:
1. கால்களில் திரவம் சேர்வதால்தான் வீக்கம் ஏற்படுகிறது. அந்த அதிகப்படியான திரவத்தை வெளியேற்றவும் வீக்கத்தைக் குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடல் நீரிழப்புடன் இருக்கும்போது, அதிக திரவத்தைத் தக்கவைத்து, வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதோடு, திரவங்களின் சமநிலையையும் பராமரிக்கலாம்.
2. உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் தண்ணீரை தக்க வைக்கும். எனவே, உணவில் உப்பை குறைப்பது வீக்கத்தை குறைக்கும். அதிக அளவு சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.
3. பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். மீன், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளும் வீக்கத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.
4. உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.
5. உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரோக்கோலி மற்றும் அவகோடா ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
6. உயர் இரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.