வளரும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு மற்ற உணவுகளுடன் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையும் தினசரி கொடுத்து வருவது அவசியம். இது அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் அமைய உதவும். தவறி விழும்போது எலும்பு உடையாமலும் பாதுகாக்கும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது தவிர, கால்சியம் அதிகமுள்ள இன்னும் 5 வகை பானங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆல்மன்ட் மில்க்: இது குறைந்த அளவு கலோரி கொண்ட உணவு. இதில் வைட்டமின் E சத்து அதிகம் உள்ளது. இதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் உடலுக்குள் சுலபமாக உறிஞ்சிக்கொள்ள ஏதுவானது.
2. ராகி அம்பாலி: இது, கேழ்வரகு மாவுடன் பட்டர் மில்க் சேர்த்துக் கரைத்து, நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு தென் இந்திய உணவு. இதில் கால்சியம் அதிகளவு இருப்பதுடன் புரோபயோட்டிக் சத்துக்களும் அதிகம். இவை இரைப்பை, குடல் இயக்கங்களையும், அறிவாற்றலையும் மேன்மையடையச் செய்ய உதவி புரியும்.
3. எள்ளுப் பால்: எள் விதைகளை உபயோகித்துத் தயாரிக்கப்படும் இந்தப் பாலை கால்சியத்தின் பவர் ஹவுஸ் எனலாம். குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தின் அளவு உயரவும், நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் எள்ளுப் பால் உதவும்.
4. தேங்காய்ப் பால்: தேங்காய்ப் பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் குழந்தைகளின் எலும்புகளுக்குள் உள்ள மஜ்ஜை (bone marrow)யின் அளவை உயர்த்த உதவும்.
5. சட்டு ட்ரிங்க்: சட்டு (Sattu) மாவுடன் பால், தண்ணீர், சால்ட், சீரகப் பவுடர் சேர்த்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுக்கலாம். இது அவர்கள் உடலில் கால்சியம் சத்தின் அளவை உயர்த்த உதவும்.
மேலே கூறிய 5 வகை பானங்களை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வர, அவர்களின் எலும்புகள் உறுதியாவதுடன் ஆரோக்கியமாகவும் வளர்வார்கள். முக்கியமாக, இவற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பு ஒரு டயட்டீஷியனை கலந்து ஆலோசித்து அறிவுரை பெற்றுக்கொள்வது நலம்.